ADDED : ஏப் 04, 2024 10:31 PM
மதுரை:திருச்சி எடமலைப்பட்டிபுதுார் செண்பகவள்ளி தாக்கல் செய்த மனு:
எடமலைப்பட்டிபுதுாரில் குட்டிமலை என்ற மலை உள்ளது. இதில் கற்கள் வெட்டி எடுக்க ஒருவருக்கு அரசு குவாரி உரிமம் வழங்கியது. விதிகளை மீறி அதிக ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இதனால் மலையில் பள்ளம் ஏற்பட்டது; மழைநீர் தேங்கியது. அதில் ஆடு, மாடுகள் விழுந்து இறந்தன.
வெடிவைத்து பாறையை தகர்க்கின்றனர். கற்கள் சிதறி வீடுகளில் விழுந்து சேதம் ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும். உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு:
வழக்கறிஞர் லாவண்யாவை கமிஷனராக நியமிக்கிறோம். அவர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி, குவாரியை ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தேவையெனில் வருவாய்த் துறை அலுவலர்கள், சர்வேயர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

