போக்குவரத்து விதிமுறையில் டாக்டருக்கு விதிவிலக்கு:ஐகோர்ட்
போக்குவரத்து விதிமுறையில் டாக்டருக்கு விதிவிலக்கு:ஐகோர்ட்
ADDED : மே 23, 2024 08:15 AM

சென்னை : 'வாகனங்களில் டாக்டர் என ஸ்டிக்கர்' ஒட்டியிருக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகனங்களில், 'காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில் இருந்து, டாக்டர்களுக்கு விலக்களிக்க கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கத்தின் பொது செயலர் டாக்டர் கே.சீனிவாசன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, ''மருத்துவ அவசரத்துக்காக செல்லும் டாக்டர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்கலாமே? வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல, டாக்டர்களுக்கும் வழங்குவது குறித்து, தேசிய மருத்துவ கமிஷனிடம் கருத்து கேட்கலாமே,'' என்றார்.
அதற்கு, 'தேசிய மருத்துவ கமிஷனையும் வழக்கில் இணைக்க வேண்டும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 14க்கு தள்ளிவைத்தார்.
மேலும், 'அதுவரை வாகனங்களில் டாக்டர் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இது இடைக்கால உத்தரவு; தேசிய மருத்துவ கமிஷன் வாதத்தை கேட்ட பின், வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
'ஸ்டிக்கரை டாக்டர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
'வாகனத்தின் முன் பக்கம் அல்லது பின் பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

