ஜல் ஜீவன் திட்டத்தில் 1.10 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ஜல் ஜீவன் திட்டத்தில் 1.10 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ADDED : பிப் 25, 2025 03:22 AM

சென்னை: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1 கோடியே, 25 லட்சத்து, 28,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டது. கடந்தாண்டு துவங்கிய இப்பணிகளுக்கு, இரண்டு தவணைகளாக, 6,556 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
இத்திட்டத்தில் இதுவரை, 1 கோடியே, 10 லட்சத்து, 72,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 14.50 லட்சம் குடியிருப்புகளுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என, தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில், 88.38 சதவீத குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மாதந்தோறும் தலா, 30 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, 14.50 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்த வேண்டி உள்ளது. இதற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, டில்லி சென்று மத்திய அரசிடம் அவகாசம் நீட்டிக்க கோரிக்கை வைத்தார்.
அதன்படி, 2028 வரை, ஜல் ஜீவன் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள குடியிருப்புகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

