மற்றவர்களை வாழ வைத்த சரித்திரம் தி.மு.க.,வுக்கு கிடையாது: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆவேசம்
மற்றவர்களை வாழ வைத்த சரித்திரம் தி.மு.க.,வுக்கு கிடையாது: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆவேசம்
ADDED : மார் 29, 2024 01:32 AM

சிவகாசி: ''தி.மு.க.,விற்கு மற்றவர்களை வாழ வைத்த சரித்திரமே கிடையாது,'' என, சிவகாசியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் நடந்த கூட்டத்தில், கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வின் விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி எங்களுடையது. ஆனால், தி.மு.க.,வில் சீட்டை கொடுத்து விட்டு கூட்டணி கட்சி வேட்பாளரை அழ வைக்கின்றனர்.
தி.மு.க.,விற்கு மற்றவர்களை வாழ வைத்த சரித்திரமே கிடையாது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தவர்களை கைகொடுத்து உயர்த்தி உள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி செல்லுமிடமெல்லாம் என்னை பற்றி தான் பேசுகின்றனர். இருவருக்கும் துாக்கம் போய்விட்டது. ஒரு முறை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, 'இரவில் துாங்கி காலை கண்விழிக்கிற போது கட்சியினரிடையே என்ன நடக்கும் என்ற அச்சத்தில் எழுந்திருக்கிறேன்' என்றார். அவர் கட்சியினர் என்ன அட்டூழியம் செய்வர் என்பதை, அவரே வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
எங்கள் ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அழைத்து வந்து, பட்டாசு உரிமையாளர்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது. அரசு சார்பாக மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடியது அ.தி.மு.க., அரசு.
தி.மு.க.,வில் 38 எம்.பி.,க்கள் இருந்தும், பட்டாசு தொழில் பற்றி எதுவும் பேசவில்லை. பட்டாசு பற்றி தீர்மானம் கொண்டு வந்து சட்டமசோதாவை சட்டசபையில் இயற்றி இருக்க வேண்டும்.
மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. பட்டாசு தொழிலில் மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின், 'நீங்கள் நலமா?' என்று கேட்கிறார்.
தி.மு.க.,வை சேர்ந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்துவதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மூன்றாண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார்.
ஸ்டாலின் எதை பேச வேண்டும் என உணர்ந்து பேச வேண்டும். நாங்கள் ஒரு எல்லை வரை தான் பொறுத்திருப்போம். நாங்களும் பேச துவங்கினால் உங்கள் நிலைமை மோசமாகும்.
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு எங்களை முடக்க முடியாது. எதையும் சந்திக்க தயார்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் உள்ள முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் மீது புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை ஆதாரமில்லை என்கிறது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது இது விசாரிக்கப்படும். ஸ்டாலின், என்னை போல் வழக்கு நடத்தி நிரபராதி என நிரூபிக்கலாமே.
தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர்கள் பலர் நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்குகின்றனர். சட்டசபையில் முன்வரிசையில் அமர்ந்துள்ள பலர் விரைவில் வேறு இடத்திற்கு சென்றுவிடுவர். இவர்கள் நம்மை ஊழல் வாதி என்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

