ADDED : ஏப் 20, 2024 02:32 AM

கோவை:கோவை பி.என்.புதுாரில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே, 200 மீட்டருக்கு அப்பால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார், 'கூட்டம் கூடக் கூடாது, கட்சி சின்னத்தை வைத்திருக்க கூடாது' என்று கூறியுள்ளனர். கட்சி சின்னத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்ற அறிவுறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த சாய்பாபா காலனி உதவி கமிஷனர் நவீன் குமார், அங்கிருந்தவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் பி.என்.புதுார் தி.மு.க., பகுதி செயலர் பாக்யராஜ், மறியலில் ஈடுபட முயன்றார். போலீசார் அவரை இழுத்து சென்று, போலீஸ் வேனில் ஏற்றினர். மொபைல் போனையும் பறித்து வைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து பேச்சு நடத்தினர். அதன் பின், பாக்யராஜை போலீசார் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

