UPDATED : ஆக 10, 2024 03:37 AM
ADDED : ஆக 10, 2024 12:52 AM

சென்னை:தமிழகத்தில் அதிகரித்து வரும் வாய் சார்ந்த பிரச்னையை தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவப் பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர், ஏதேனும் ஒரு வகையில் வாய் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், பெரும்பாலான பல் மருத்துவ கிளினிக்குகள், மாநகரங்களிலும் நகர்ப்புறத்தை சார்ந்தே இயங்கி வருகின்றன.
இதனால், பல் சார்ந்த பாதிப்பை மக்கள் கண்டுகொள்ளாததால், அவை வேறு விதமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், மாவட்ட சுகாதார சங்கத்தின் சார்பில், 395 இடங்களில் பல் மருத்துவப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை பெரியளவில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில், பொது சுகாதாரத் துறையின் கீழ் பல் மருத்துவப் பிரிவு துவக்க, மக்கள் நல்வாழ்வு துறை ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
பல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்போது, அவை, நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பல் வலியை கவனிக்காமல் விட்டால், பற்களில் சொத்தை அதிகரிப்பதற்கும், குழிகள் விழுவதற்கும் காரணமாகி விடும்.
உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், பற்களில் ஆழம் அதிகரித்து, நரம்புகளையும், ரத்த நாளங்களையும் பாதிக்கும். பல் வலிக்கு உடனடி சிகிச்சை பெறாவிட்டால், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஈறுகளையும், அதை சார்ந்த எலும்புகளையும் தாக்குகிறது.
மேலும் தொற்றுகள் பரவி, பற்களில் சீழ் படியும்போது, வீக்கமும் காய்ச்சல் ஏற்பட்டு, தீவிர உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குட்கா, புகையிலை போன்றவற்றாலும், பல், வாய் சார்ந்த பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன.
எனவே, பல்லுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பல் மருத்துவ கிளினிக் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

