தேர்தல் பிரசாரத்தில் காங்., கட்சியினர் கோஷ்டி மோதல்
தேர்தல் பிரசாரத்தில் காங்., கட்சியினர் கோஷ்டி மோதல்
ADDED : ஏப் 11, 2024 01:44 AM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதி வேட்பாளராக சிட்டிங், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் மாலை, காங்., நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து தனித்தனியாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஓட்டு சேகரித்தனர்.
அப்போது அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்ட்டில், நகர தலைவர் பார்த்தசாரதி, இளைஞரணி நிர்வாகி விமல் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு காங்கிரஸ் கோஷ்டியினர், பார்த்தசாரதி மற்றும் விமலிடம் பிரசாரம் செய்யக்கூடாது எனக்கூறி, இருவரையும், உருட்டு கட்டையால் தாக்கி, ஜீப்பிலிருந்து கீழே தள்ளி புரட்டி, புரட்டி அடித்தனர்.
இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காயமடைந்த பார்த்தசாரதி மற்றும் விமல் ஆகியோர், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

