ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல்
ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல்
ADDED : ஏப் 15, 2024 04:54 AM

சென்னை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேர் மீது, என்.சி.பி., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் என்.சி.பி., என்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக, டில்லியில் இருந்து உணவுப் பொருட்கள் போல, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற, ஜாபர் சாதிக் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த முகேஷ், 33; முஜிபுர், 34, மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தம், 45, என்பவரும் கைதானார். இவர்கள், சென்னை பெருங்குடியில் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அதற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாபர் சாதிக்குடன் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் மீது, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.

