முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி வழக்கு
முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி வழக்கு
ADDED : ஜூன் 11, 2024 06:29 AM
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மோசடி செய்த வழக்கில் கோயில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து 2000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள், கண்காணிப்பாளர், பேஷ்கார், இளநிலை உதவியாளர்கள், அர்ச்சகர்கள், காவலர்கள் என 89 பேர் பணி புரிகின்றனர்.
இவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதி 2016 ல் இருந்து ராமேஸ்வரம் ஸ்டேட் பாங்கில் செலுத்தப்பட்டு வந்தது.
ஊழியர்கள் பங்குத் தொகை, கோயில் பங்குத்தொகை என பணம் செலுத்தப்பட்டது.
இதில் ஸ்டேட்பாங்கில் ஆன்-லைன் பண பரிவர்த்தனைக்கு கோயிலில் பணிபுரிந்த தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவன் அருள் குமரன் அலைபேசி எண் இணைக்கப்பட்டது.
ஆனால் தொழிலாளர்களிடம் பெறப்பட்ட வருங்கால வைப்பு நிதித்தொகை முறையாக வங்கியில் செலுத்தப்படவில்லை. இது குறித்து அப்போதைய கோயில் இணை ஆணையர் கல்யாணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் பின் கணக்கை ஆய்வு செய்த போது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி 76 லட்சத்து 68 ஆயிரத்து 547 ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இது குறித்து இணை ஆணையர் கல்யாணி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் தற்காலிக பணியாளர் சிவன் அருள் குமரன், அப்போதைய கணக்காளர் ரவீந்திரன் மீது வழக்குப்பதிந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2020 ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
அனுமதியின்றி வங்கி கணக்கு
சி.பி.சி.ஐ.டி போலீசார் ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், வங்கி கணக்குகளில் நடந்த பணப்பரிமாற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தனர். இதில் சிவன் அருள் குமரன், இவரது தந்தை கோபால், முறைகேட்டின் போது பணியில் இருந்த கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கணக்காளர் ரவீந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
ராமநாதபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் கோயில் பெயரில் அனுமதியில்லாமல் நன்கொடையாளர் வங்கி கணக்கு என கணக்கு துவங்கியுள்ளனர். கணக்கு துவங்க இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த கணக்கில் நன்கொடையாக பெறப்பட்ட ரூ.11.96 லட்சத்தை எடுக்க 6 காசோலைகளில் இணை ஆணையர் கையெழுத்திட்டுள்ளார். இந்த பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயில் ஊழியர்கள் பெயரில் பணம் கட்டியதாக சிவன் அருள் குமரன் போலி ரசீது தயாரித்து கணக்கு காட்டியுள்ளார். தனது தந்தை கோபால் கணக்குக்கு பணபரிவர்த்தனை செய்துள்ளார்.
இதற்கு உடந்தையாக கணக்காளர் இருந்துள்ளார்.
இதையடுத்து நான்கு பேரின் மீதும் பணம் கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் பிரபாகரனிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்தனர்.
ஊழியர்களிடமும், கோயில் நன்கொடை எனவும் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை வேகமெடுத்துள்ளது.

