வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி மத்திய அரசு பறிப்பு: ஸ்டாலின் புகார்
வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி மத்திய அரசு பறிப்பு: ஸ்டாலின் புகார்
ADDED : ஏப் 05, 2024 12:53 AM
சென்னை:'இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு என்று கூசாமல் பிரதமர் மோடி புளுகுகிறார்' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு: மோடியின் புதிய இந்தியாவில், 'டிஜிட்டல்' வழிப்பறி. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என மக்களின் ஆசையை துாண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன சிறுக சிறுக சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தனர்.
சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக 'மினிமம் பேலன்ஸ்' இல்லை என அபராதம் விதித்தே 21,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளிடம் உருவி இருக்கின்றனர்.
கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி; கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக தந்து விட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல் ஏழை மக்களிடம், அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?
'இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல. ஏழைகளுக்கான அரசு' எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

