கட்டட அனுமதி வரைபடங்கள் உள்ளாட்சிகள் கைவிரிப்பால் அவதி
கட்டட அனுமதி வரைபடங்கள் உள்ளாட்சிகள் கைவிரிப்பால் அவதி
ADDED : ஏப் 19, 2024 10:38 PM
சென்னை:பழைய கட்டடங்களில் வீடு வாங்குவோர், அதன் வரைபடத்தின் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக, கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதே போன்று, 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி வழங்குகின்றன.
பழைய வீடு
இத்திட்டங்களில் புதி தாக வீடு வாங்கும் போது, உரிய அனுமதி வரைபடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. வங்கிகள் வீட்டுக்கடன் கொடுக்கும்போது, இந்த வரைபடங்களை ஆய்வு செய்கின்றன.
ஆனால், இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 10, 15 ஆண்டுகளான நிலையில், பழைய வீடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வீடு வாங்கும் போது, அதன் உரிமையாளர் வைத்திருக்கும் வரைபடத்தை மட்டுமே நம்ப வேண்டிய நிலை உள்ளது.
வீட்டின் உரிமையாளர் காட்டும் கட்டட வரைபடத்தின் உண்மை தன்மையை உறுதி செய்ய, அதற்கு அனுமதி வழங்கிய உள்ளாட்சி அமைப்பு களை மக்கள் நாடுகின்றனர். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்தில், இந்த வரைபடங்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
புதிய வீடு வாங்கும் போது, வரைபட ஆய்வில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படுவதில்லை. ஆனால், பழைய வீடுகளை வாங்கும் போது, குறிப்பாக வங்கி கடனில் உள்ள வீடுகளை வாங்கும் போது, வரைபடத்தின் அசல் பிரதி கிடைப்பதுஇல்லை.
விற்பனையாளரிடம் இருக்கும் வரைபடத்தின் உண்மை தன்மை அறிய, உள்ளாட்சி அமைப்புகளை அணுகினால், அங்கு வரைபடம் இல்லை என்று தான் பதில் வருகிறது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், 'மேனுவல்' முறையில் தான், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.
'டிஜிட்டல்' முறை
இந்த வரைபடங்களை நீண்ட காலத்துக்கு இருப்பு வைக்க முடியாது. எனவே, தற்போது யாராவது, 10, 15 ஆண்டுகளுக்கு முந்தைய வரைபடங்களை கேட்டால், தர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தற்போதைய நிலவரப்படி, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பில் இருக்கும் வரைபடங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

