சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர்: சபாநாயகரிடம் பா.ஜ., மனு
சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர்: சபாநாயகரிடம் பா.ஜ., மனு
ADDED : ஜூலை 17, 2024 03:17 PM
வெள்ளம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்புக்கூட்டத்தைக் கூட்டும்படி, சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலைச் சந்தித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மனுக் கொடுத்தனர்.
டில்லி சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 70. இதில் பா.ஜ.,வுக்கு ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலை, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் விஜேந்தர் குப்தா, மோகன் சிங் பிஷ்ட், அஜய் மஹாவார், அனில் பாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன், அபய் வர்மா ஆகியோர் சந்தித்து, சட்டசபை சிறப்புக்கூட்டத்தைக் கூட்டும்படி வலியுறுத்தி மனுக் கொடுத்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது:
மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, தண்ணீர் தேக்கம் உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆம் ஆத்மி அரசின் கவனத்தை ஈர்க்கவும், அரசுக்கு பொறுப்பை உணர்த்தவும் டில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு, சபாநாயகரிடம் வலியுறுத்தினோம்.
மின்கொள்முதலை காரணம் காட்டி டிஸ்காம்கள் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. டில்லி மக்கள் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் குடிநீர் பற்றாக்குறைக்கு எதிராக போராடினர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகளில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. ஆனால், டில்லி அரசு, சிறையில் உள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஜாமின் பெறுவதிலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதிலும் முனைப்பு காட்டுகிறது.
டில்லி அரசின் பொறுப்புணர்வை உறுதி செய்ய சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தூதுக்குழு வலியுறுத்தியது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

