ADDED : மார் 30, 2024 01:00 AM
சென்னை:'ஓட்டுக்காக மற்ற கட்சிகளை போல, பா.ஜ., பணம் கொடுக்காது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த, அவரது அறிக்கை:
ஆரத்தி எடுக்கும் போது, நான் பணம் கொடுத்தது போல, ஒரு வீடியோவை வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை, கோவை கலெக்டர் ஆராய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில், 2023 ஜூலை, 29ல் எங்கள், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் போது, எடுக்கப்பட்ட வீடியோ அது.
பாசத்தின் அடையாளமாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நம் கலாசாரம். அதை, தேர்தல் நேரத்தில் நாங்கள் செய்வதில்லை. நாங்கள் மற்றவர்களை போல, ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் நம்பிக்கை வைப்பதில்லை. இதை, ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இன்று பொய்களை பரப்பும் கட்சிகள், ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது, கோவை கலெக்டர் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

