பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது திருச்சி பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கணிப்பு
பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது திருச்சி பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கணிப்பு
ADDED : மார் 22, 2024 11:08 PM

திருச்சி:''தி.மு.க., ஆட்சிக்கு தொந்தரவு தர, கவர்னரை வைத்து மிரட்டிப் பார்க்கின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் நடந்த திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சி எல்லாவற்றுக்கும் துவக்கமாக உள்ளது. தி.மு.க., தேர்தலில் நிற்க வேண்டும் என, திருச்சி மாநாட்டில் தான் முடிவு செய்யப்பட்டது. திருச்சி பாதை, எப்போதும் வெற்றி பாதை; அதன் அடையாளமாக தான் தி.மு.க., ஆறு முறை ஆட்சியில் அமர்ந்துள்ளது.
ஏராளமான திட்டங்கள்
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகத்தின் விடியலுக்கான பயணம் திருச்சியில் தான் துவங்கியது. அது தான், அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்தி, தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தியது. இந்தியாவே பாராட்டும்படியே தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. பாசிச பா.ஜ.,வை வீழ்த்தி, 'இண்டியா' கூட்டணி ஆட்சியை மத்தியில் ஏற்படுத்த நடப்பது தான் இந்த தேர்தல்.
தேர்தல் என்பதால், பிரதமர் இப்போது இந்தியாவில் இருக்கிறார். அதனால் தான் அவர் அடிக்கடி தமிழகம் வருகிறார். அண்மையில் சேலத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க.,வினருக்கு துாக்கம் வரவில்லை என்று பேசியுள்ளார்.
உண்மையில் தன் ஆட்சி முடியப்போகிறது என்று, மோடிக்கு தான் துாக்கம் வரவில்லை.
பத்து ஆண்டு காலம் ஆட்சி செய்த பிரதமர் மோடி, தமிழகத்துக்கு செய்த ஒரு சிறப்புத் திட்டத்தை கூற முடியாத நிலையில், தி.மு.க.,வை விமர்சிக்கிறார். கடந்த மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பா.ஜ., தமிழகத்துக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. சென்னை, துாத்துக்குடி வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய ரயில் திட்டம் எங்கே என்ற கேள்விகளுக்கு, இதுவரை பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை.
மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த ஆட்சி நடத்துகிறோம். ஆனால், சொல்வதற்கு எதுவுமே இல்லாமல், பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். அவரால் சாதனைகளை சொல்ல முடியவில்லை. 10 ஆண்டு இமாலய ஊழல் நிறைந்த ஆட்சியை தான், இந்தியாவில் பா.ஜ., நடத்தியுள்ளது.
தேர்தல் பத்திரம், பி.எம்.கேர் நிதி ஆகியவை மூலம் பா.ஜ., பெரும் ஊழல் செய்துள்ளது. ரபேல் ஊழல் நடந்துள்ளது. இவை அனைத்தும் வரும் ஜூன் மாதம் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அம்பலமாகும்.
பழிவாங்கல்
பா.ஜ., ஊழலை மறைக்க, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். இதற்கு, பா.ஜ.,வின் தோல்வி பயம் தான் காரணம்.
தனக்கு எதிராக இண்டியா என்ற வலுவான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்துவிட்டன என்பதற்காக, மக்கள் பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்று திரண்டுவிட்டனர் என்ற பயத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகள் மீது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கையை பா.ஜ., மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு தொந்தரவு தர, கவர்னரை வைத்து மிரட்டிப் பார்க்கின்றனர். மக்களுக்கான சட்டங்களை நாம் நிறைவேற்றினால், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கிறார். ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் செல்கிறோம். வரலாற்றில் எந்த கவர்னரையும், நீதிமன்றம் இப்படி கண்டித்ததில்லை.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர், பெங்களூரில் வெடித்த குண்டு, தமிழர்கள் வைத்த குண்டு என்று சொல்கிறார். தமிழர்கள் என்ன வன்முறையாளர்களா; பயங்கரவாதிகளா?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். பா.ஜ.,வின் பாசிச எண்ணத்துக்கு முடிவு எழுதப்படும். இதெல்லாம் நடக்க, இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

