தென்மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தும் அமித்ஷா: நாளை மதுரை வருகிறார்
தென்மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தும் அமித்ஷா: நாளை மதுரை வருகிறார்
ADDED : ஏப் 03, 2024 07:29 AM

மதுரை : லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்.4, 5ல் சுற்றுப்பயணம் வருகிறார். அவரது இந்தப் பயணத்தில் 3 தொகுதிகளில் அவர் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கிறார்.
நாளை (ஏப். 4ல்) டில்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு மாலை 3:45 மணிக்கு அமித்ஷா வருகிறார். இங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். அங்கு கூட்டணி கட்சியான அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்திக்கிறார்.
அங்கிருந்து மாலை 6:45 மணிக்கு மதுரை திரும்பும் அமித்ஷா, பழங்காநத்தம் சந்திப்பில் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இதில் மதுரை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பொறுப்பாளர்களாக உள்ளவர்களையும் சந்திக்க உள்ளார். பின்னர் இரவில் பசுமலை கேட் வே ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் (ஏப்.5) காலையில் மீனாட்சி அம்மன் கோயில் சென்று தரிசனம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா அங்கும் ரோடு ஷோ நடத்தி கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு கூட்டணி கட்சி வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார். அந்நிகழ்ச்சி முடிந்ததும் டில்லி புறப்படுகிறார்.

