'கூட்டல், மதிப்பெண் பதிவில் பிழை வந்தால் நடவடிக்கை'
'கூட்டல், மதிப்பெண் பதிவில் பிழை வந்தால் நடவடிக்கை'
ADDED : மார் 30, 2024 01:19 AM
சென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான விடைத்தாள்கள், ஏப்.1ம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. மாநிலம் முழுதும், 83 இடங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்களையும், அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ளது.
அதன் விபரம்:
* விடைத்தாள் திருத்தும் மையங்களில், விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பதிவிடும் பணிகளில், ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்
* வெளியாட்கள், ஊடகம், பத்திரிகை சார்ந்த நபர்கள் என, வேறு யாரையும் அனுமதிக்க கூடாது
* விடைத்தாள்களில் அனைத்து பக்கங்களையும் சரியாக பார்த்து மதிப்பிட வேண்டும். நடுவில் ஏதாவது பக்கத்தை விட்டு விடக்கூடாது
* மதிப்பெண்களின் கூட்டல், பதிவிடுதல் போன்றவற்றில் கவனக்குறைவாக செயல்பட்டு தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர், சரிபார்க்கும் அலுவலர், தலைமை திருத்துனர் உள்ளிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
* பல நேரங்களில் நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, கூட்டல் பிழை, எண்ணை மாற்றி பதிவிடுவது போன்ற காரணங்களால், மதிப்பெண் மாறி விடுகிறது. ஆசிரியர்கள், அலுவலர்கள் கவனமாக இந்த பணிகளில் ஈடுபட வேண்டும்.
'தேனீர், ஜூஸ் அருந்துகிறேன், சாப்பிட செல்கிறேன்' என, வெளியே செல்லக்கூடாது.
இவ்வாறு வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

