ரயில் இன்ஜினில் பைக் சிக்கியது கடலுார் அருகே பரபரப்பு
ரயில் இன்ஜினில் பைக் சிக்கியது கடலுார் அருகே பரபரப்பு
ADDED : மே 24, 2024 10:36 PM

குள்ளஞ்சாவடி, காரைக்காலில் இருந்து நேற்று காலை பெங்களூருக்கு விரைவு ரயில் புறப்பட்டது. காலை 8:30 மணி அளவில், கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த சின்ன தோப்புக்கொல்லை ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது, தண்டவாளத்தில் பைக் நின்றது. ரயில் அருகில் வந்ததை கண்ட வாலிபர், பைக்கை போட்டுவிட்டு தப்பினார்.
வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் கிடந்த பைக் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்கவே பயணிகள் அலறினர். பைக் ரயில் இன்ஜினில் சிக்கி சத்தம் வந்ததும், லோகோ பைலட் ரயிலின் வேகத்தை படிப்படியாக குறைத்து, சற்று துாரத்தில் நிறுத்தினார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், ரயில் இன்ஜினில் சிக்கி நொறுங்கிய பைக்கை கயிறு கட்டி இழுத்து, அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து 30 நிமிடம் தாமதமாக ரயில் கடலுாருக்கு புறப்பட்டு சென்றது.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில், சின்ன தோப்புக்கொல்லையைச் சேர்ந்த நரசிம்மன், 21, என்பவர் வேலைக்கு செல்வதற்காக ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கடலுார் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

