எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்ததால் 186 நம்பிக்கை மையங்கள் மூடல்
எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்ததால் 186 நம்பிக்கை மையங்கள் மூடல்
ADDED : ஏப் 25, 2024 12:28 AM

சென்னை: தமிழகத்தில் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் பாதிப்பு குறைந்த பகுதிகளில் இருந்த, 186 நம்பிக்கை மையங்கள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
அதேபோல், மாநிலத்தில் 1,000 பேரில், 0.17 சதவீதம் பேருக்கு, பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், தமிழகத்தில், 377 எய்ட்ஸ் பரிசோதனை மற்றும் ஆலோசனை மையம் என்ற நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஆண்டுக்கு 10க்கும் குறைவாக மற்றும் பாதிப்பே இல்லாத பகுதிகளில் இருந்த நம்பிக்கை மையங்கள் மூடப்பபட்டு வருகின்றன.
இதுகுறித்து, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிப்பு குறைந்த பகுதிகளில் உள்ள நம்பிக்கை மையங்கள் மூடப்பட்டு, அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த டெக்னிஷியன், ஆலோசகர் உள்ளிட்டோர், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2023 - 24 நிதியாண்டில், 82 நம்பிக்கை மையங்களை மத்திய அரசு மூடியுள்ளது. அதேபோல், இந்த நிதியாண்டில், 104 நம்பிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு மூடப்பட உள்ளன. மொத்தம் 186 நம்பிக்கை மையங்கள் மூடப்படுகின்றன.
அதேநேரம், நம்பிக்கை மையங்கள் இருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில், மற்ற பரிசோதனையை போல், எச்.ஐ.வி., - எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் குறித்த பரிசோதனை செய்து கொள்ளலாம். அதற்கான மருத்துவ சாதனங்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன.
பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, எச்.ஐ.வி., - எய்ட்ஸ் கட்டுப்படுத்தில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

