/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அன்பு நகரில் சகதியான தெருக்கள்
/
அன்பு நகரில் சகதியான தெருக்கள்
ADDED : டிச 19, 2025 05:52 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அன்பு நகரில் உள்ள தெருக்களில் ரோடுகள் இன்றி சேறும் சகதியுமாக இருப்பதால் சேற்று குழம்பில் நடந்து செல்லும் மக்கள் அவதியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டில் உள்ள அன்பு நகரில் 10 தெருக்கள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஒரு ஆண்டு காலமாக நடந்து வருகிறது. குழாய்கள் மற்றும் தொட்டிகள் பதிக்கும் பணி நடந்து முடிந்த பின், ரோடுகள் அமைக்கப்படும் என நகராட்சி சார்பில் கூறப்பட்டது. பணி முடிந்து பல மாதங்களாகியும் சேதம் அடைந்த ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் தெருக்களில் தடுமாறி செல்வதுடன் டூவீலர்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
மழைக்காலத்தில் ரோடுகள் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையில் அனைத்து தெருக்களும் சகதியாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் சேற்றில் நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர். வீடுகள் முழுவதும் சகதியாக இருப்பதால், மக்கள் நகராட்சி மீது உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். ரோடு அமைக்காவிட்டாலும் பரவாயில்லை மண்ணடித்து சமமாக செய்து தர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் நடைபெறப் போகிறது என்ற காரணம் சொல்லி பல ஆண்டுகளாக ரோடுகள் அமைக்க மறுக்கின்றன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் ரோடுகள் குண்டும் குழியுமாகவும், மழை வெள்ளம் தேங்கியும் நடக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

