/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறப்பு விழா முடிந்த கையோடு அப்படியே கிடப்பில் போடப்படும் சமுதாய கூடங்கள்
/
திறப்பு விழா முடிந்த கையோடு அப்படியே கிடப்பில் போடப்படும் சமுதாய கூடங்கள்
திறப்பு விழா முடிந்த கையோடு அப்படியே கிடப்பில் போடப்படும் சமுதாய கூடங்கள்
திறப்பு விழா முடிந்த கையோடு அப்படியே கிடப்பில் போடப்படும் சமுதாய கூடங்கள்
ADDED : ஜூலை 24, 2024 06:00 AM

மாவட்டங்களில் உள்ள நகராட்சி, ஊராட்சிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக, பல்வேறு மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் சமுதாய கூடங்கள் நவீன சுகாதார வளாகங்கள் புது கழிப்பறைகள் நூலகங்கள் உட்பட பல கட்டடங்கள் லட்சக்கணக்கான நிதியில் கட்டப்படுகின்றன.
கட்டி முடிக்கப்பட்டு அமைச்சர்கள் மூலம் திறப்பு விழாவும் செய்யப்படுகிறது.
பின்னர், மாத கணக்கில் ஆன போதிலும் கட்டடங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவது இல்லை. திறப்பு விழா முடிந்த கையோடு அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு கட்டடங்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது.
அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் நகராட்சி மூலம் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா கண்டு 8 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அருகில் காய்கறி மார்க்கெட் திறப்பு விழா கண்டு மாத கணக்கில் ஆகியும் திறக்கப்படவில்லை.
சாத்தூரில் சடையம்பட்டியில் பல கோடி ரூபாய் நிதியில் பயணியர் விடுதி கட்டப்பட்டு முதல்வர் திறந்து வைத்தும், பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
திருத்தங்களில் கவிதா நகரில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டு பயன்பாடின்றி உள்ளது. திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டியில் பல்நோக்கு மைய கட்டடம் 9 மாதங்களுக்கு முன்பு அமைச்சரால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் தற்போது தனியார் கோடவுனாக பயன்படுத்தி வருகின்றனர்.
இது போன்று மாவட்டத்தில், சுகாதார வளாகங்கள், இ - சேவை மையங்கள் கட்டப்பட்டு ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு பயன்பாடு இன்றி அவை சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
பல ஊர்களில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராததால், ஏழை மக்கள் தனியாக திருமண மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

