sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்

/

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்


ADDED : பிப் 20, 2024 12:35 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடன் சுமையை தவிர்த்திருக்கலாம்


கே.எம்.ஆர்.கார்த்திகேயன், செயலாளர், அனைத்து வியாபாரிகள் சங்கம். விருதுநகர்: மகளிர் உரிமை, புதுமைப்பெண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது வரவேற்கதக்கது. இதன் மூலம் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களின் உயர்கல்வி உறுதி செய்யப்படும். தொழில் வளர்ச்சியை பொறுத்த வரையில் பல நிறுவனங்களைதமிழகத்தில் முதலீடு செய்ய வரவேற்றதாக கூறுகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறும் நிலையில், முதலீடு அதிகரித்தால் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இதன் மூலம் கடைநிலை தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். விவசாயத்தை பற்றி பெரிதாக அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட்டின் மதிப்பு ரூ.மூன்றரை லட்சம் கோடி. இதில் 1.35 லட்சம் கோடி கடன். இவ்வாறு கடன் சுமையை அதிகரிப்பதை தவிர்த்திருக்கலாம்.

திட்டங்கள் தொடர வேண்டும்


-புவனா, கல்லுாரி மாணவி, அருப்புக்கோட்டை: அனைத்து தரப்பினருக்கும் கல்வி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உயர் கல்வி செலவு, இது போன்று அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ஆயிரம் ரூபாய் வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு படிக்கும் மாணவிகளுக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்பது மகிழ்ச்சி. கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் போனஸ். இது போன்ற திட்டங்கள் நிதியை காரணம் காட்டி நிறுத்தாமல் மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

தொல்லியல் துறைக்கு புது வெளிச்சம்


செல்லப்பாண்டியன் பேராசிரியர், அருப்புக்கோட்டை: வழக்கமான பட்ஜெட் என்றாலும், பல புது அறிவிப்புகள் வந்துள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்க, ஏழை மாணவர்களின் கல்வி ஊக்கத் தொகை என கல்வி உட்பட அறிவிப்புகள் உள்ளது. அதிலும், தொல்லியல் துறைக்கு புது வெளிச்சமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய அகழாய்வு திட்டங்களுக்கு 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டு இடங்களில் அகழாய்வு நடைபெறும் எனவும், ராமநாதபுரம் அழகன்குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பும் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா வளர்ச்சிக்கு பயனுள்ள வகையிலும் அறிவிப்புகள் வந்துள்ளது.

கிராமப்புற வளர்ச்சிக்கு திட்டம் இல்லை


காளிதாஸ், தனியார் ஊழியர், நரிக்குடி: பட்ஜெட்டில் நகர்ப்புற வளர்ச்சிக்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிசைகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகள் கட்டி தரும் திட்டம், வறுமையில் வாடும் ஏழை குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்து, மீட்டெடுக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அதே சமயம் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளின் வளர்ச்சிக்கு சொல்லும் படியாக திட்டங்கள் இல்லை. விவசாயத்தை மேம்படுத்த நீர் வழிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் போராடி வருகின்றனர். அதைப்பற்றி எந்த ஒரு அக்கறையும் எடுத்துக் கொள்ளாதது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. மொத்தத்தில் தொழில், வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

விவசாயிகளுக்கான எந்த திட்டமும் இல்லை


செல்வம், விவசாயி, சாலை மறைக்குளம்: விவசாயிகளின் நலன் காக்கும் எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் அதிக அளவில் வெங்காயம் பயிரிட்டு வருகிறோம். அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள், பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயத்தை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான். இப்பகுதியில் வெங்காயத்திற்கான மண்டலம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது. விவசாயிகளை வஞ்சிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. விவசாயிகளைப் பற்றி எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அக்கறை இல்லாமல் வஞ்சிப்பது வேதனையாக இருக்கிறது.

எதிர்பார்ப்பு ஏமாற்றம்


தவசி, விவசாயி, தேவதானம்: நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தும் அறிவிப்பு மகிழ்ச்சி. விவசாய உற்பத்தி பொருட்களுக்கான ஆதார விலையை அதிகப்படுத்தி அறிவிப்பு எதிர்பார்த்தோம். 100 நாள் வேலை திட்ட பணி அதிகரிப்பால் விவசாய பணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை ஈடு செய்யும் முயற்சியும், இப்பணிகளில் நவீன இயந்திரங்கள் பயன்பாடும் இதற்கான மானியம் அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. நேரடி விவசாயிகள் பயன்படும் உழவர் சந்தைகளை சரி செய்யும் அறிவிப்பும் இடம்பெறவில்லை. விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றம் காண்பதை தடுப்பதை பற்றி அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் எதிர்பார்ப்பு ஏமாற்றமே.

மகிழ்ச்சியுமில்லை திருப்தியுமில்லை


ராம்குமார் ராஜா, ராஜபாளையம் நுாற்பாலை சங்க பொருளாளர்: அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நுாற்பாலைகள் சந்தித்து வரும் மின் கட்டண உயர்வு, சோலார் மின் உற்பத்திக்கும் வரி போன்ற நடவடிக்கைக்கு தீர்வு எதிர்பார்த்தோம். விருதுநகர் உள்ளிட்ட 10 நகரங்களில் மினி ஜவுளி பூங்கா, சிறப்பு ஆராய்ச்சி மையம் அறிவிப்பு, தொழில்துறை படிப்புகளான பாலிடெக்னிக் தரம் உயர்த்த பாடுபடுதல், கிராம சாலைகள் மேம்படுத்த ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கீடு, வேளாண், சிறு குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது கடந்த ஆண்டை விட அதிகரிப்பு மகிழ்ச்சி. நலிந்து வரும் நுாற்பாலை தொழில்களை பாதுகாக்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லை. பட்ஜெட் நிதி பற்றாக்குறை அதிகரிப்பு, மாநிலத்தின் கடன் சுமை ரூ.8 லட்சம் கோடி அதிகரித்திருப்பது நல்லதல்ல.

ஏமாற்றமே மிச்சம்


பி.எஸ்.ஜி.செல்வசந்திரகுமார். சாத்துார் தொழில் வர்த்தக சங்க செயலாளர்: விருதுநகர் மாவட்டம் விவசாயம் அழிந்து மக்கள் பட்டாசு ஆலைகளில் வேலைக்கு சென்று உயிரை கையில் பிடித்து வைத்து பணிபுரிந்து வருகிறார்கள். பட்டாசு தொழிலுக்கு மாற்றாக சிப்காட் அமைந்து விடும் என்று நம்பி உள்ளனர். ஆனால் 9 வருடமாக இடங்கள் கைப்பற்றியும் இங்கு எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. சிப்காட் ஜவுளி பூங்கா என்ற ஒரு தொழிற்சாலை அறிவிப்போடு இருப்பது ஏமாற்றம் தருகிறது. வைப்பாற்றில் சாக்கடை கலந்து வருகிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. முள்செடி காடு போல வளர்ந்துள்ளது. இதை சரி செய்ய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

தென் மாவட்டங்களில் ஐ.டி., கம்பெனிகள்


அருள் மொழி வர்மன், ஆடிட்டர், சிவகாசி: சென்னைக்கு ஆயிரம் கோடிக்கணக்கில் ஒதுக்கிய தமிழக அரசு, தென் மாவட்டங்களுக்கு புதிதாக பெரிதாக ஒன்றும் நிதி ஒதுக்கவில்லை. சென்னை மெட்ரோ ரயிலுக்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கிய மாநில அரசு, கோவை, மதுரை மாநகர்மெட்ரோ ரயில்களுக்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லை.தென் மாவட்டங்களில் புதிய டைடல் பார்க், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவ நிதி ஒதுக்குவதற்கு பதில் தென் மாவட்டங்களில் ஐடி கம்பெனிகள் ஆரம்பித்தால் வரிச்சலுகை அளித்திருக்கலாம். ஒற்றை சாளர வசதியில் லைசன்ஸ்கள் வழங்க வழி வகை செய்திருக்கலாம். திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதி கொடுப்பதற்கு பதில் அனைத்து பெரிய கோயில்களிலும் இலவச தரிசனத்திற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். புற்றுநோய் மேலாண்மை இயக்கம், ஆட்டிசம் நோய் மேலாண்மை, திருநங்கைகளின் கல்வி போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கியதை பாராட்டலாம்.

தொழில் வளர்ச்சி மேம்படும்


ராதா சேகரன் அச்சகத் தொழிலதிபர், சிவகாசி: சிலப்பதிகாரம், மணிமேகலை நுால்களை இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நுால்கள் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சகத் தொழில் வளர்ச்சி பெரும். சிவகாசி நகருக்கு வெளியே சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. சுற்று வட்ட சாலை அமையும் பட்சத்தில் நகரில் தொழில் வளர்ச்சி மேம்படும். விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதின் மூலம் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படுவது தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமாக அமையும்.

கல்வித்துறை வளர்ச்சி பெறும்


பேராசிரியர் குருசாமி பாண்டியன், கலசலிங்கம் பல்கலை., கிருஷ்ணன் கோவில்: கொரோனாவிற்கு பிறகு பள்ளி மாணவர்களை மீண்டும் முழு அளவில் கல்வியில் ஈடுபடச் செய்வது ஆசிரியர்களுக்கு சவாலாக இருந்தது. ஏராளமான மாணவர்கள் இடைநிற்றல் ஏற்பட்டது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. தற்போதைய பட்ஜெட்டிலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வரவேற்கத்தக்கது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் பேருதவியாக இருக்கும். உயர் கல்வி வரை சிரமம் இன்றி படிப்பார்கள். இதனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் உயர் கல்வி பெறுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பள்ளிக் கல்வியும், உயர் கல்வித் துறையும் வளர்ச்சி பெறும்.

அரசு ஊழியர்களுக்கு துரோகம்


வைரவன், மாவட்ட செயலாளர், அரசு ஊழியர் சங்கம்: பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றும் தருகிறது. தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து இருந்தோம். அந்த அறிவிப்பும் வரவில்லை. மூன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்பும் அறிவிப்பு வரும் என்று காத்திருந்தோம். அதுவும் வரவில்லை. ஓய்வு அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பு வரவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்யும் அறிக்கையாக பார்க்கிறோம். மிகப்பெரிய ஏமாற்றம். எங்கள் அனைத்து ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் திட்டமிட்டபடி பிப். 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்.

ஏமாற்றம் தரும் பட்ஜெட்


மாரிமுத்து, மாநில பொதுச்செயலாளர், நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம்: ரோடு மேம்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். யானை வாங்குவது யானையை பராமரிக்க பாகன் வேண்டுமல்லவா. சாலை பணியாளர்கள் பணியிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. 14,872 பணியிடங்கள் தான் தற்போதைய தேதி வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1986ல் இருந்த ரோட்டின் நீளத்திற்கு நியமிக்கப்பட்ட பணியிடங்கள் இவை. தற்போது ரோட்டின் நீளம் அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியிடத்தில் பாதி பேர் தான் பணி புரிகின்றனர். சாலை பணியாளர் பற்றி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது. அதே போல் ரோடு கட்டுமானத்தில் சாலை ஆய்வாளர் பணியிடம் என்பது மிகவும் முக்கியமானது. இவர்கள் கட்டுமானம், பராமரிப்பு என்ற பிரிவில் மட்டும் தான் இருக்கின்றனர். மற்ற 'விங்'குகளில் இல்லை. இவர்களின் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

வேலைவாய்ப்பு தரும் ஜவுளி பூங்காக்கள்


-சிவகாமி, குடும்பத் தலைவி, ஸ்ரீவில்லிபுத்தூர்: ஐந்தாயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைப்பது எதிர்கால நீர் மேலாண்மையை காக்கும். சிறு, குறு தொழில்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொழில்துறையை வளரச் செய்யும். ஆட்டிசம் கோளாறு சிகிச்சைக்கு சிறப்பு மையம் அமைப்பது வரவேற்கத்தக்கது. விருதுநகர், சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். 10 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு கடனுதவி வழங்குவது ஏழை எளிய குடும்பங்களை கடன் தொல்லையில் இருந்து மீட்கும்.






      Dinamalar
      Follow us