/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு இல்லாத தெருக்கள்; செயல்படாத சுகாதார வளாகம்
/
ரோடு இல்லாத தெருக்கள்; செயல்படாத சுகாதார வளாகம்
ADDED : நவ 11, 2025 03:24 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் அத்திகுளம் செங்குளம் ஊராட்சியில் பல்வேறு சேய் கிராமங்கள் உள்ள நிலையில் பல்வேறு தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதிகள் இல்லாமலும், சுகாதார வளாகம், சமுதாயக்கூடம், மயானத்தில் வசதிகள் இல்லாமலும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அத்திகுளம் செங்குளம் ஊராட்சியில் செங்குளம், ராஜிவ் காந்தி நகர், கோதை நகர், சித்தாலம்புத்தூர், சின்ன அத்திகுளம் ஆகிய சேய்கிராமங்கள் உள்ளது. நகராட்சி பகுதியை ஓட்டி உள்ள வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியாக இந்த ஊராட்சி விளங்குகிறது. சிவகாசி மெயின் ரோட்டில் இருந்து செங்குளம் ஊருக்கு செல்லும் ரோடு நன்றாக இருந்தாலும் தெரு ரோடுகள், குறுகிய சந்துகள் சேதமடைந்து காணப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாக வசதி, சமுதாயக்கூடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ராஜிவ் காந்தி நகரில் பல்வேறு தெருக்களில் ரோடு வசதி செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சில குறுக்கு தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு சமுதாய கூடம், பூங்கா, பொது பயன்பாட்டு இடங்களில் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நீதிமன்றம் வளாக முன்புள்ள நீர்வரத்து ஓடை புதர் மண்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. கோதை நகரில் நீதிமன்ற காம்பவுண்ட் சுவரை ஒட்டிய தெருவில் இன்னும் ரோடு வசதி செய்யப்படவில்லை. சிறு பாலம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. சித்தாலம்புத்துார் ரயில்வே தரை பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி விடுவதால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. நடந்து செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இங்குள்ள கண்மாய் கரை போதிய அகலம் இல்லாமல் விபத்து அபாயம் காணப்படுகிறது.
சின்ன அத்திகுளத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. பல்வேறு தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லை மயானத்துக்கு செல்லும் ரோட்டில் நான்கு வழி சாலை அமைந்து விட்டதால் தற்போது மயானத்திற்கு செல்ல வழி இன்றி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய குறைகளை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

