/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் புகை தொழிலாளர்கள் பாதிப்பு
/
நகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் புகை தொழிலாளர்கள் பாதிப்பு
நகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் புகை தொழிலாளர்கள் பாதிப்பு
நகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் புகை தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 28, 2025 05:28 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பிடித்து வெளியேறும் நச்சுப் புகையால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்ததுடன் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை நகராட்சியின் குப்பை கிடங்கு சுக்கிலநத்தம் ரோட்டில் பல ஏக்கர் பரப்பில் உள்ளது. கிடங்கின் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக மெகா தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக வட இந்திய தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கியிருந்து பணியை செய்து வருகின்றனர். 5 நாட்களுக்கு முன்பு இரவில் யாரோ விஷமிகள் கிடங்கில் உள்ள குப்பை குவியலில் தீ வைத்ததில், தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும் குப்பைகளின் கீழ் மட்ட பகுதியில் நெருப்பு புகைவதால் காட்டமான புகை வெளியேறுகிறது. இந்த நச்சுப் புகையால் கண் எரிச்சலும் மூச்சு திணறலும் ஏற்படுவதால் அங்கு தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு சென்று விட்டனர். 3 நாட்கள் கழித்து பணிக்கு வந்துள்ளனர். இருப்பினும் புகை வெளியேறி கொண்டே உள்ளது.
ஆடி மாதமாக இருப்பதால் பலத்த காற்றிற்கு நெருப்பு புகைந்து, புகை அதிக அளவில் வெளியேறுகிறது. குப்பை கிடங்கின் வழியாகத்தான் சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் டூவீலர்களில் வந்து செல்வர். கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் தீயை மட்டும் அணைக்க நடவடிக்கை எடுத்து அத்துடன் தன் பணியை முடித்துக்கொண்டது. தொடர்ந்து வெளியேறும் நச்சுப் புகையை முற்றிலும் அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.

