/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை ரயிலில் ரூ.10 மயிலாடுதுறை ரயிலில் ரூ.30
/
மதுரை ரயிலில் ரூ.10 மயிலாடுதுறை ரயிலில் ரூ.30
ADDED : மார் 02, 2024 05:11 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகர் செல்வதற்கு ரூ 10ம், மயிலாடுதுறை, குருவாயூர் ரயில்களில் ரூ.30ம் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தடநீட்டிப்பு செய்யப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் கொடுக்கும் நிலைக்கு விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் ஆளாகியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு முன்பு வரை மதுரை- -செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 பேசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆனால், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்கு ரூ. 30 வசூலிக்கப்பட்டது.
கொரோனா நோய் தாக்கம் குறைந்து வழக்கமான வாழ்க்கை சூழல் துவங்கியுள்ள நிலையில் பல மாதங்களாக இந்த ரயில்களில் எக்ஸ்பிரஸ் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனை பயணிகள் ரயில் கட்டணமாக குறைக்க வேண்டுமென மக்கள் கோரி வந்த நிலையில் பிப்.27முதல் பயணிகள் ரயில் கட்டண வசூலிக்கப்படுகிறது.
இதன்படி செங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்கு ரூ.10ம், மயிலாடுதுறை, குருவாயூர் ரயில்களில் ரூ.30ம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் குழப்பத்திற்கும், கூடுதல் கட்டணம் கொடுக்கும் சூழலுக்கும் ஆளாகியுள்ளனர்.
மதுரை- செங்கோட்டை வழித்தடத்தில் 3 பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த நிலையில் ஒரு ரயில் மயிலாடுதுறைக்கும், மற்றொரு ரயில் குருவாயூருக்கும் தடநீட்டிப்பு செய்யப்பட்டதால் எக்ஸ்பிரஸ் கட்டண டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டிய நிலை விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே இருந்ததுபோல் மதுரை- செங்கோட்டை வழித்தடத்தில் 3 பயணிகள் ரயில்கள் இயக்கவும், மயிலாடுதுறை மற்றும் குருவாயூர் ரயில்களின் நேரங்களை மாற்றி அமைத்து கூடுதல் ரயில் சேவையாக இயக்கவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டுமென விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

