ADDED : மார் 16, 2024 12:00 AM

சிவகாசி : திருத்தங்கலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் செயல்படாமல் மக்கள், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டினை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்தங்கல் நகருக்கு பல்வேறு பணி நிமித்தமாக பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நகர் முழுவதுமே மெயின் ரோடுகள் குறுகியதாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் பஸ் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டதால் திருத்தங்கல் நகரின் வெளியே விருதுநகர் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
2013ல் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு 2016ல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகங்கள், சுகாதார வளாகங்கள், பொருட்கள் பாதுகாக்கும் அறை, டிரைவர், நடத்துனர் ஓய்வு அறை, குடிநீர் வசதிக்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி, உயர்கோபுர மின் விளக்குகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்கள் மட்டுமே இங்கு பஸ்கள் வந்து சென்றன. அதன் பின்னர் இன்று வரையிலும் காட்சிப் பொருளாகவே உள்ளது.
இங்குள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து விட்டது. கட்டடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடியும் தருவாய்க்கு வந்து கொண்டிருக்கின்றது. ஆரம்ப காலகட்டங்களில் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பிய 30 அரசு நகர பஸ்கள், 35 புறநகர் பஸ்கள், 50 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
இதனால் விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களுக்கு செல்கின்ற பயணிகள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறிச் செல்லலாம்.
ஆனால் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டில் இல்லாததால் இந்த நகரங்களுக்கு செல்கின்ற பயணிகள் சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டியுள்ளது.
திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் நகரை விட்டு வெளியே ஒதுக்குப் புறமாக இருப்பதால் இரவு நேரத்தில் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது.
சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்டினை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொன்னுசெல்வம், தனியார் ஊழியர், திருத்தங்கல்: நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. ஆனால் பஸ் ஸ்டாண்டினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வில்லை. விருது நகர் மார்க்கமாக செல்கின்ற அரசு பஸ்களை திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் தனியார் பஸ்களும் இங்கு வந்து செல்லும். பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று செல்கின்ற பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் வரவேண்டும்.

