/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடையால் சுகாதாரகேடு, குடிநீருக்கு அவதி அருப்புக்கோட்டை பிரமடை ஓடை மக்கள் அல்லல்
/
ஓடையால் சுகாதாரகேடு, குடிநீருக்கு அவதி அருப்புக்கோட்டை பிரமடை ஓடை மக்கள் அல்லல்
ஓடையால் சுகாதாரகேடு, குடிநீருக்கு அவதி அருப்புக்கோட்டை பிரமடை ஓடை மக்கள் அல்லல்
ஓடையால் சுகாதாரகேடு, குடிநீருக்கு அவதி அருப்புக்கோட்டை பிரமடை ஓடை மக்கள் அல்லல்
ADDED : நவ 01, 2024 04:38 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பிரமடை ஓடை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை சுகாதார கேடாக இருப்பதாலும், முறையான குடிநீர் வராததாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் 23வது வார்டை சேர்ந்தது பிரமடை ஓடை பகுதி. இங்கு 3க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து, திருச்சுழி ரோடு வரை இடையே பிரமடை ஓடை செல்கிறது.
இதன் வழியாக மழை நீர் அங்குள்ள ஊருணியில் சேர்கிறது. ஓடை முறையான பராமரிப்பு இல்லாததால், கழிவு நீர் விடப்பட்டு, வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது.
ஓடையின் இரு புறமும் பல லட்ச ரூபாய் செலவில் நகராட்சி மூலம் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. கட்டிய ஓராண்டிலேயே தடுப்பூசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. மேலும் அருகில் உள்ள ஊருணியை அரைகுறையாக தூர்வாரியதால், மழை நீரும் கழிவு நீரும் கலந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளது.
தினமும் 2, 3 பாம்புகளாவது குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வதாக மக்கள் பீதியில் உள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது இல்லை.
இந்தப் பகுதியில் உள்ள புது கழிப்பறையை பல ஆண்டுகளுக்கு முன்பு இடித்து விட்டதால் பெண்கள் கழிப்பறையை தேடி செல்ல வேண்டியுள்ளது.
கழிப்பறை தேவை
கருப்பாயி, குடும்பதலைவி: பிரமடை ஓடை பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்குள்ள பெண்கள் கழிப்பறையை இடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
கழிப்பறை இன்றி நாங்கள் சிரமப்படுகிறோம்.
2, 3 தெருக்கள் தள்ளியுள்ள நகராட்சி கழிப்பறையை காசு கொடுத்து பயன்படுத்துகிறோம். இந்தப் பகுதிக்கு என பெண்கள் கழிப்பறையை நகராட்சி கட்டித்தர வேண்டும்.
ஓடை பராமரிப்பு அவசியம்
செல்வராஜ், தொழிலாளி: எங்கள் தெருவின் அருகில் ஓடை செல்கிறது. ஓடையில் கட்டப்பட்ட தடுப்பு சுவற்றின் ஒரு பகுதி இடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
ஓடை பராமரிப்பு இல்லாததால் கழிவு நீரும், முட்புதர்களும் வளர்ந்து சுகாதார கேடாக உள்ளது.
கொசு தொல்லை தாங்க முடியவில்லை. வீட்டில் கதவை திறக்கவே முடியவில்லை. கொசுக்கடியால் குழந்தைகளுக்கு பலவித நோய்கள் வருகிறது.
பாம்புகள் தொல்லை
மஞ்சுளாதேவி, குடும்பதலைவி: எங்கள் பகுதியில் உள்ள ஓடை பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் முட்புதர்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்து உள்ளது.
இதில் பாம்புகள் விஷப் பூச்சிகள் அதிக அளவில் உள்ளன. தினசரி பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் வந்து விடுகின்றன.
இவற்றிற்கு பயந்து நாங்கள் வீட்டின் கதவை எப்போது மூடியே வைக்க வேண்டி உள்ளது. ஓடை பகுதியில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

