/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் மின் மயானம், கண்மாயில் கழிவுநீர் கலப்பு
/
கிடப்பில் மின் மயானம், கண்மாயில் கழிவுநீர் கலப்பு
ADDED : மார் 03, 2024 05:54 AM

காரியாபட்டி: மின் மயானம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராதது, கழிவுநீர் ஊருணியில் தேங்கி, பின் கண்மாயில் கலப்பதால் நிலங்கள் பாதிப்பு, ஜல் ஜீவன் திட்டத்தில் தோண்டப்பட்ட ரோடுகள் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி திம்மன்பட்டி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சி திம்மன்பட்டி பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் வீதியில் தேங்குகிறது. ரேஷன் கடை கிடையாது.
மாதத்திற்கு ஒரு முறை பொருட்கள் கொண்டு வந்து, நாடக மேடையில் வைத்து சப்ளை செய்வதோடு சரி. காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் வரத்து ஓடைகள் வழியாக திம்மன்பட்டி கண்மாய்க்கு வந்து சேரும்.
தனியார் நிறுவனத்தினர் அப்பகுதியில் உள்ள நிலங்களை மொத்தமாக வாங்கி வரத்து ஓடைகளை தடுத்து விட்டனர்.
கண்மாய்க்கு மழை நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க ரோடுகளை சேதப்படுத்தினர். நாளடைவில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து ஆட்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
2 கி. மீ., தூரம் உள்ள திம்மன்பட்டி ரோடு படுமோசமாகி வாகனங்கள் சென்று வர முடியவில்லை. மின் மயானம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போட்டனர்.
மல்லாங்கிணரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வண்ணான் ஊருணியில் தேங்கி, அங்கிருந்து கண்மாயில் கலப்பதால், நிலங்கள் பாழடைந்து வருகின்றன.
ரேஷன் கடை வேண்டும்
அழகர்சாமி, விவசாயி: ரேஷன் கடை இல்லாததால் மாதத்திற்கு ஒரு முறை பொருட்களை வண்டியில் கொண்டு வந்து, நாடக மேடையில் வைத்து சப்ளை செய்கின்றனர்.
பொருட்கள் வாங்க முடியாதவர்கள் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. நிரந்தரமாக இங்கே ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
அஜித் குமார், தனியார் ஊழியர்: மின் மயானம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மழை நேரங்களில் மயானத்திற்கு சென்று இறுதிச் சடங்குகள் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. மின் மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வாறுகால் வசதி கிடையாது.
கழிவு நீர் வீதியில் தேங்கி, கொசு உற்பத்தியாகிறது. வாறுகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான ரோடால் சிரமம்
ராஜேந்திரன், விவசாயி:
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க வீதிகளை தோண்டி சேதப்படுத்தினர். மராமத்து செய்யயாமல் அப்படியே விட்டுவிட்டதால் முற்றிலுமாக சேதம் அடைந்து வருகிறது.
வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. ஆட்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
காட்டுப் பகுதியில் உள்ள ஓடைகளை சேதப்படுத்தினர்.
மழை நேரங்களில் மழை நீர் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. ஓடைகளை தூர்வாரி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

