/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் பால வேலை: போக்குவரத்தில் மாற்றம்
/
காரியாபட்டியில் பால வேலை: போக்குவரத்தில் மாற்றம்
ADDED : டிச 26, 2024 04:33 AM

காரியாபட்டி: காரியாபட்டி கால்நடை மருத்துவமனை அருகே பாலம் வேலை நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரியாபட்டியில் கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கழிவு நீர் செல்ல கட்டப்பட்ட பாலம் சேதமடைந்தது.
மழை நேரங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கும். வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து அப்பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டது.
தற்போது எளிதில் கழிவு நீர் செல்கிறது. இதைத் தொடர்ந்து பெரியார் நகரில் வாறுகால் கட்டும் பணி நடக்கிறது.
கால்நடை மருத்துவமனை அருகே இருந்த பாலம் சேதமடைந்து கழிவு நீர் செல்ல வழியில்லாததால் உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. இதனால் முக்கு ரோட்டில் இருந்து பெரியார் நகர், செவல்பட்டி வழியாக வாகனங்கள் செல்ல முடியாது.
மாற்று ஏற்பாடாக முக்கு ரோட்டில் இருந்து கள்ளிக்குடி ரோட்டில் சென்று நான்கு வழி சாலையில் ஏறி அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கும், அதேபோல் அருப்புக்கோட்டையில் இருந்து வரும் வாகனங்கள் கள்ளிக்குடி பிரிவு ரோடு பஸ் ஸ்டாண்ட்டிற்கும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அதேபோல் பெரியார் நகர், செவல்பட்டி, கழுவனசேரி உள்ளிட்ட ஊர்களுக்கு டூவீலர்கள், காரில் செல்பவர்கள் சக்தி மாரியம்மன் கோயில் ரோட்டில் சென்று செவல்பட்டி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் இதனை அறிந்து மாற்று பாதையில் செல்ல வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

