/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெண்டர் விட்டும் பணிகள் துவங்கவில்லை
/
டெண்டர் விட்டும் பணிகள் துவங்கவில்லை
ADDED : ஜூலை 25, 2024 03:58 AM

சிவகாசி,: சிவகாசியில் சிறுவர் பூங்கா தெருவில் சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு டெண்டர் விடப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளிவந்துள்ளது, என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் இந்திரா தேவி தினமலர் நாளிதழை எடுத்து காண்பித்து குற்றம்சாட்டினார்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
குமரி பாஸ்கர், பா.ஜ.,: நுண் உரக் குடில்களில் ஏழு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. இதனை அவ்வப்போது சரி செய்திருந்தால் செலவு குறைந்திருக்கும். குப்பைகள் தேக்கமும் இருந்திருக்காது.
ஸ்ரீநிகா தி.மு.க.,: 6வது வார்டில் 10 க்கும் மேற்பட்ட போர்வெல் மோட்டார்கள் பயன்பாடு இன்றி உள்ளது. எம்.பி., நிதியில் அமைக்கப்பட்ட போர்வெல்லில் தகவல் இல்லாமல் திடீரென போர்வெல் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல்லில் பழைய குழாய்கள் பயன்படுத்தி உள்ளனரா என சந்தேகமாக உள்ளது. குழாய் சேதமடைந்தால் கவுன்சிலர் தான் சீரமைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனலட்சுமி, காங்.,: பேவர் பிளாக் ரோடுகள் மேடு பள்ளமாக உள்ளது. 42வது வார்டில் இரு வாரங்களாககுடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
ராஜேஷ், ம.தி.மு.க.,: பிரதான குடிநீர் தொட்டிகளில் காவலாளி இல்லாததால் வெளிநபர்கள் நடமாட்டம்அதிகமாக உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ள வளாகங்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
கமிஷனர்: மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
மாரீஸ்வரி, தி.மு.க.,: 13வது வார்டில் 6 மாதங்களாக மோட்டார் பழுது சரி செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் கூறினால் உதிரி பாகங்கள் இல்லை என கூறுகின்றனர்.
இந்திராதேவி, தி.மு.க.,: சிறுவர் பூங்கா தெருவில் சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு டெண்டர் விடப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளிவந்துள்ளது.
அப்போது தினமலர்நாளிதழை எடுத்து காண்பித்து அதில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பேசினார். இதேபோல் பேட்டை தெருவில் பாலம் அமைக்க டெண்டர் விட்டு ஓரண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.
மேயர்: பணிகளை உடனே தொடங்க வேண்டும். இல்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, மறு ஒப்பந்தம் விட வேண்டும்.
ரவி சங்கர், காங்.,: தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொத்தமரத்து ஊருணி துார்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
நகரமைப்பு அலுவலர்: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
சரவணகுமார் தி.மு.க.,: போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆவின் பாலகங்களை அகற்ற வேண்டும்.
சாமுவேல், சுயே.,: காய்கறி மார்க்கெட் புதுப்பிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுஉள்ளது. ஆனால் வேறொரு புதிய இடத்தில்மார்க்கெட் கட்டினால் நன்றாக இருக்கும்.
சாந்தி, அ.தி.மு.க.,: 10வது வார்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்க தீர்மானம்நிறைவேற்றப்பட்டும் பணிகள் தொடங்கவில்லை. மழைக்காலம் தொடங்கும் முன் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மொத்தம் 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

