ADDED : டிச 18, 2025 05:47 AM
அருப்புக்கோட்டை: டிச. 18- -: அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் முறையான பராமரிப்பு இன்றி போனதால் நீர்வரத்து கால்வாய்கள் அடைபட்டும், சாயக்கழிவுகள் கலப்பதால் கண்மாயில் இருக்கின்ற தண்ணீரை பயன் படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் 127 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முன்பு, இதிலிருந்து நகராட்சி மூலம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
கண்மாயை சுற்றியுள்ள 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. மழைக்காலங்களில் கண்மாய் முழுவதும் தண்ணீர் நிறைந்து இருக்கும்.
நெல் விளைச்சல் அமோகமாக இருந்தது. சோளம், கம்பு, வெள்ளரி, கத்தரி, வெண்டை, சுரைக்காய் உள்ளிட்ட காய்களும் விளைவிக்கப்பட்டன. கால்நடைகளுக்கு நாற்றும் வளர்க்கப்பட்டது.
நல்ல குளு குளு சூழலில் கண்மாய் இருந்ததால் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கி இருந்தன.
கண்மாயை முறையான பராமரிப்பு செய்யாமல் விட்டதால் ஆகாயத்தாமரைகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. நகரில் உள்ள ஒட்டுமொத்த கழிவு நீரும் கண்மாயில் விடப்படுகிறது சாயப்பட்டறைகள் கழிவு நீரும் கண்மாயில் விடப்பட்டு தண்ணீர் விஷத்தன்மை உடையதாக மாறிவிட்டது.
இதனால் நிலத்தடி நீரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.
இந்த தண்ணீரை பயன்படுத்தினால் பயிர்கள் அழுகி விடுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். 20 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
தற்போது தொடர் மழையால் கண்மாய் அரைகுறையாக நிறைந்து இருந்தாலும் இருக்கின்ற நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கண்மாய்கள் மராமத்து பணிகள் செய்யப்படும் என அரசு கூறி வந்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
பேருக்கு கண்மாய் கரைகளின் உயர்த்தும் பணியை மட்டும் செய்கின்றனர்.
பெரிய கண்மாயில் ஆகாய தாமரைகள் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
இவற்றை முழுமையாக அகற்றினால் தான் கண்மாயில் முழு கொள்ளளவில் தண்ணீர் சேரும்.
பெரிய கண்மாய் தூர் வாரப்பட்டு பராமரிக்கப்படும் என்பது, அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே உள்ளது.

