ADDED : ஏப் 24, 2024 12:16 AM

சேத்துார் : சேத்தூர் அடுத்த தேவதானத்தில் நெற்கதிர்களை யானை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேவதானம் அருகே அசையா மணி விலக்கு வழியே மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் பாதையில் நச்சாடைப்பேரி கண்மாய் அமைந்துள்ளது.
250 ஏக்கர் நெல் விளைய கூடிய இப்பகுதியில் கண்மாய் கரையை ஒட்டி முகவூரை சேர்ந்த கருப்பையா 58, விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் கண்மாய் கரை வழியே இறங்கி கரையை ஓட்டியுள்ள விலை நிலத்தின் பாத்திகளில் இறங்கி துவம்சம் செய்துள்ளது.
இதனால் ஒரு பகுதியில் இருந்த நெற்பயிர்கள் பாதித்தும் மற்ற இரண்டு இடங்களில் மிதித்து சகதியாக்கி விளைந்த பயிர்களை தின்றும் பிடுங்கியும் போட்டுள்ளன.
வனத்துறையினர் ரோந்து வந்தும் மீண்டும் யானை சத்தம் இப்பகுதியில் கேட்டு வருவதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
கருப்பையா, விவசாயி: கதிர்கள் பால் பிடிக்கும் பருவம் வந்துள்ள நிலையில் யானை கூட்டம் ருசி பார்த்து சென்றுள்ளது. தோப்புகளுக்குள் சுற்றி வந்த யானை புதிதாக நெல்வயலில் நுழைந்துள்ளது. வனத்துறையினர் ஒருவாரத்திற்கு பட்டாசுகளை தந்து விரட்ட சொல்லி உள்ளனர்.
வேறு வழியின்றி தினமும் முறை வைத்து விவசாயிகள் இரவு நேரம் காவல் காக்கிறோம்.
மின் கம்பத்தில் போகஸ் விளக்குகளை மாட்டி வைத்துள்ளோம். வனத்துறையினர் மலை அடிவார பகுதிக்கு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

