/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 07, 2024 11:39 PM
செஞ்சிமாவட்டத்தில் நெல் அறுவடை தீவிரம் அடைந்துள்ளதால் மார்க்கெட் கமிட்டிகளுக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வரை வரத்து இருக்கும் என்பதால் நெல்லின் விலை குறையாமல் இருக்க அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும், மாவட்டத்தையொட்டி உள்ள திருவண்ணாமலை, கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட் கமிட்டிகளிலும் நெல் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால், ஜூன், ஜூலை மாதங்களில் நெல் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக நெல் விலை உயர்ந்திருந்தது. அத்துடன் இந்திய அளவில் அரிசி விலையும் உயர்ந்தது.
இந்த ஆண்டு சீசன் துவங்கியதில் இருந்து மார்க்கெட் கமிட்டிகளுக்கு நெல் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக பொன்னி நெல்லின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு 75 கிலோ மூட்டை 2700 ரூபாயை தொட்டுள்ளது. மற்ற ரகங்களும் விலை குறையாமல் உள்ளது.
அடுத்து வரும் நாட்களிலும் நெல் வரத்து இதே நிலையில் நீடிக்கும். மார்ச் மாதம் வரை சீரான நெல் வரத்து இருக்கும். வழக்கமாக சீசன் துவக்கத்திலும், உச்சத்திலும் இருக்கும் விலை நாளடைவில் சரியத் துவங்கும்.
இந்த விலை வீழ்ச்சியைத் தடுக்க அரசு தரப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது வழக்கம். இந்த முறை சம்பா பருவத்தில் ஏராளமான விவசாயிகள் தாமதமாக நடவு செய்தனர். இதன் அறுவடை தற்போது நடந்து வருகிறது.
வழக்கமாக தீவிர பனிப்பொழிவு இருக்கும் மார்கழி மாதம் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கே விலை கூடுதலாக இருக்கும்.
சில நாட்களாக கடும் வெயில் காணப்படும் நிலையில் அடுத்து வரும் நெல்லுக்கும் இதே விலை கிடைப்பது சந்தேகம். இதனால் நெல் விலை வீழ்ச்சியடையும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
விலை வீழ்ச்சியடைவதைத் தடுக்க உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தனர். இதில் பல இடங்களில் விவசாயிகள் சென்று வர சிரமப்பட்டனர். சில இடங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முழு வீச்சில் செயல்படவில்லை.
அத்துடன் போதிய அளவிற்கு கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை. எனவே இந்த ஆண்டு 20 கிராமங்களுக்கு ஒரு மையம் வீதம் கூடுதல் மையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் சாலை வசதி உள்ள கிராமங்களைத் தேர்வு செய்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகம் இருந்தது.
பல இடங்களில் விவசாயிகளுக்கும் ஆளும் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. நெல் கொள்முதலுக்கு பணம் கேட்கும் ஆடியோவும் வெளியானது.
விவசாயிகளிடம் மூட்டைக்கு 30 முதல் 60 ரூபாய் வரை அடாவடியாக வசூல் செய்தனர். முன்பதிவு செய்வதிலும் குளறுபடி செய்தனர். புகாரின் அடிப்படையில் சில அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு துவக்கத்திலேயே அனைத்து மையங்களிலும் பணம் வசூலிக்கக் கூடாது என பகிரங்கமாக கலெக்டரின் உத்தரவாக விளம்பர பேனர் வைக்க வேண்டும். அத்துடன் கண்காணிப்பை அதிகரித்து, கலெக்டர், சப் கலெக்டர் என அதிகாரிகள் , அடிக்கடி சோதனை நடத்தி விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு நேர்மையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

