/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகத்தை வேடம்பட்டு கிராம மக்கள் முற்றுகை: மருந்துகழிவு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல்
/
கலெக்டர் அலுவலகத்தை வேடம்பட்டு கிராம மக்கள் முற்றுகை: மருந்துகழிவு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல்
கலெக்டர் அலுவலகத்தை வேடம்பட்டு கிராம மக்கள் முற்றுகை: மருந்துகழிவு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல்
கலெக்டர் அலுவலகத்தை வேடம்பட்டு கிராம மக்கள் முற்றுகை: மருந்துகழிவு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல்
ADDED : மே 14, 2024 05:54 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவும், ஆலை இயங்குவதை தட்டிகேட்கும் கிராமத்தினர் மீது பொய்வழக்கு பதிவதை கண்டித்தும், கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையினால் எழும் நச்சுக் கழிவு மூலம் வேடம்பட்டு, நன்னாடு, பெரும்பாக்கம், தோகைப்பாடி உள்ளிட்ட கிராம மக்களுக்கு சுவாச கோளாறு, வியாதியால் பாதிக்கப்படுவதாக, அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆலையை மூடக்கோரி, கடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து, திடீரென அந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனால், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஆலைக்கு சீல் வைத்து தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில், சீல் வைக் கப்பட்ட அந்த ஆலை, இரவு நேரங்களில் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவால் பாதிக்கப்படுவ தாக கிராம மக்கள் மீண்டும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அந்த ஆலையின் இரவு காவலாளியை தாக்கியதாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த மதன், காமராஜ், முருகன், தீனதயாளன், சுந்தரமோகன் உள்ளிட்ட சிலர் மீது, காணை போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த வேடம்பட்டு கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். ஆலை நிர்வாகம் மற்றும் போலீசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'ஆலை நிர்வாகத்திடம், அதிகாரிகளும், போலீசாரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்களை வஞ்சிக்கின்றனர். அந்த ஆலையிலிருந்து வரும் கழிவுநீர் பம்பை ஆற்றில் கலக்கிறது. அதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.
நச்சு காற்றால் பொது மக்களும், ஆடு, மாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
மூடிய ஆலைக்கு பணியாற்ற வந்த, தொழிலாளர்களின் பைக்கை எடுத்து போலீசில் ஒப்படைத்தோம். ஆனால், தொழிலாளியை தாக்கியதாக பொய் வழக்கு போட்டுள்ளனர்.
அதனைத் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து போராடுவோம்' என்றனர்.
இதனையடுத்து போலீசார் அறிவுரையின்பேரில், கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

