/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.8.39 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகி வரும் அவலம்: திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திண்டிவனம் கிளை சிறைச்சாலை
/
ரூ.8.39 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகி வரும் அவலம்: திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திண்டிவனம் கிளை சிறைச்சாலை
ரூ.8.39 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகி வரும் அவலம்: திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திண்டிவனம் கிளை சிறைச்சாலை
ரூ.8.39 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகி வரும் அவலம்: திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திண்டிவனம் கிளை சிறைச்சாலை
ADDED : ஏப் 25, 2024 11:45 PM

திண்டிவனம்:திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே ரூ. 8.39 கோடி செலவில் புதிய கிளைச் சிறை கட்டப்பட்டு, பல வருடங்கள் கடந்தும் திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளதால், கட்டடங்கள் வீணாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகர மைய பகுதியில், தாலுகா அலுவலகத்தையொட்டி, நேரு வீதியில் கிளை சிறை உள்ளது. கடந்த 1894ம் ஆண்டில் 61 சென்ட் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சிறையில் 29 விசாரணைக் கைதிகளை மட்டுமே வைக்க கூடிய வசதி உள்ளது.
குறுகிய இடத்தில் கிளை சிறைச்சாலை உள்ளதால், கூடுதலாக சிறைக்கு வரும் விசாரணை கைதிகள் விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில், திண்டிவனம் அருகே விழுப்புரம் செல்லும் சாலையிலுள்ள ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்பட்டது. இதனால் நேரு வீதியில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களும் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
நீதிமன்றம் ஒரு பக்கம், கிளை சிறைச்சாலை ஒரு பக்கம் இருந்ததால், கடந்த ஆட்சியில், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 8.39 கோடி ரூபாய் செலவில், காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் புதிய கிளைச் சிறை கட்டும் பணி துவங்கியது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் துவங்கிய பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவுற்றது. புதிய கிளை சிறையில் 200 விசாரணைக் கைதிகளை வைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பிரச்னைக்குரிய விசாரணைக் கைதிகளை தனியாக அடைத்து வைக்கும் வகையில் 50 பேர் தங்க வைக்கும் 'செல்' கட்டப்பட்டுள்ளது.
புதியதாக கட்டப்பட்ட கிளைச் சிறை, முறைப்படி, காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம், திண்டிவனம் கிளைச்சிறை அதிகாரிகளிடம் கடந்த 2021 மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு கடலுாரிலுள்ள மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மூலம், பணிகள் நிறைவு பெற்றது குறித்து,தமிழக அரசிற்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நடைமுறை முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையில், இதுவரை புதியதாக கட்டப்பட்ட கிளை சிறைச்சாலை திறக்கப்படாமல் வீணாக பூட்டியே கிடக்கின்றது.
இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'புதிய கிளை சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் தமிழக அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா எப்போது நடக்கும் என்று அரசுதான் முடிவு செய்து அறிவிக்கும்'' என்று கூறினார்.
திண்டிவனத்தில் ரூ.8.39 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிளை சிறைச்சாலை திறக்கப்படாமல் உள்ளதால், கட்டடங்கள் பாழாகி வருகின்றது.
இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் பழனி தலையிட்டு, மூடிக்கிடக்கும் கிளை சிறைச்சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

