/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்டபை தேர்தலுக்கான நேர்காணல் நிகழ்ச்சி
/
சட்டபை தேர்தலுக்கான நேர்காணல் நிகழ்ச்சி
ADDED : ஜன 27, 2026 04:17 AM
ச ட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பிய கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 9ம் தேதியிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் உட்பட தலைமை நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் திண்டிவனம் அர்ஜூனன், வானுார் சக்கரபாணியும் பங்கேற்றனர்.
நேர்காணலில் மாவட்டத்தில் விருப்ப மனு கொடுத்திருந்த 180க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுச் செயலாளர் பேசுகையில், 'தமிழகத்தில் அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான். தொகுதியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் ஒற்றுமையாக வேலை செய்யுங்கள்.
அதே போல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினாலும் வெற்றி பெற செய்யுங்கள். தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்' என்றார்.
வழக்கமாக நேர்காணல் என்றால், விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேருக்கு நேராக அழைத்து, கட்சிக்கு எப்போது வந்தீர்கள், கட்சிக்காக நடத்திய போராட்டம், சிறை சென்ற விபரம், எவ்வளவு செலவு செய்வீர்கள், ஜாதி பின்னணி உள்ளிட்ட விபரங்களை கேட்பது வழக்கம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பெரிய ஹாலில் உட்கார வைத்து கட்சியின் விருப்ப மனு கொடுத்தவர்கள் மத்தியில் பொதுச் செயலாளர் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் கட்சியினர் யாருக்கு சீட் கிடைக்கும் என தெரியாமல் புலம்பி வருவதோடு, அதிருப்தி அடைந்துள்ளனர்.

