/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் துவங்கியது
/
பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் துவங்கியது
பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் துவங்கியது
பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் துவங்கியது
ADDED : மார் 08, 2024 11:29 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் புற்றுநோய் தடுப்பு மையம் மூலம், 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கான எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுதும் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவன புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில், எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் நேற்று காலை துவங்கியது.
முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மையத்தினை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மையத்தில் கலெக்டர் பழனி மற்றும் மருத்துவ அலுவலர்கள் பள்ளி மாணவிகளுக்கு எச்.பி.வி., தடுப்பூசி செலுத்துவதைத் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டம் குறித்து, அடையாறு புற்றுநோய் நிறுவன மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி.,) முக்கிய காரணமாகும். அதனைத் தடுக்க தேசிய நோய் தடுப்பு திட்டத்தில், எச்.பி.வி., தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனை நடைமுறைப்படுத்திய வெளி நாடுகளின் அனுபவம் பயனளித்துள்ளது.
மனித பாப்பிலோமா வைரசுக்கு, தடுப்பூசி போடுவதன் மூலம், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டப்படி 2030ம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஒழிக்கப்படும். இந்த எச்.பி.வி. தடுப்பூசி திட்டம், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், எச்.பி.வி தடுப்பூசி இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது. தடுப்பூசி குறித்து விளக்கம் அளிக்க விழுப்புரத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேர்காணல் நடத்தியுள்ளனர்.
இந்த புற்று நோயைத் தடுக்க, 9 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு சிறுமிக்கும் 2 டோஸ் தடுப்பூசி வழங்கப்படும். முதல் தடுப்பூசி செலுத்திய நாளிலில் இருந்து 180 நாட்களில் அடுத்த தடுப்பூசி போட வேண்டும்.
தற்போது முதல் கட்டமாக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள புற்று நோய் பரிசோதனை மையத்தில், 2,000 சிறுமிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்படும்.
பிறகு சுகாதாரத் துறை ஒத்துழைப்புடன், விழுப்புரம் நகரில் ஒவ்வொரு பள்ளிகளிலும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசியை மொபைல் போன் எண். 91503 00227ல் பதிவு செய்து செலுத்திக் கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறுமிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் (காசநோய்) சுதாகர், அடையாறு புற்றுநோய் மைய இணை இயக்குனர் சுவாமிநாதன், சிறப்பு புற்றுநோய் மருத்துவர் ஜெயஸ்ரீ, விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

