/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
/
யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
ADDED : ஆக 26, 2025 11:48 PM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லுார் சுற்றுவட்டார பகுதியில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு, சவுக்கு, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக, நவரைப்பட்டம் அறுவடை முடிந்து விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பெரும்பாலான பகுதியில் சம்பா போகத்திற்கான நடவு பணியும் துவங்க உள்ளது.
நடவுக்கு முதற்கட்டமாக விவசாயிகள் நிலத்தில் யூரியா, டி.ஏ.பி., போன்ற உரங்களை கலந்து அளிப்பது வழக்கம்.
திருவெண்ணெய்நல்லுார், ஏமப்பூர், செம்மார், சித்தலிங்கமடம், டி. எடையார், பேரங்கியூர், ஆனத்துார், அரசூர் உள்ளிட்ட, 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மூலதன உரமான யூரியா வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் யூரியா வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் வேறு வழியில்லாமல் கடந்த நவரை பட்டத்திற்கு தனியார் கடைகளுக்கு சென்று யூரியா போன்ற உரங்களை வாங்கி நிலத்திற்கு தெளித்தனர்.
தற்போதைய சூழலில் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் கடைகளிலும் யூரியா முற்றிலும் இல்லாததால் விவசாயிகள் வரும் சம்பா போகத்தில், எப்படி பயிர் செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைககள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.