/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய்த்துறையினர் தொடர் வேலை நிறுத்தத்தால் பணிகள் முடக்கம்! சான்றிதழ்கள், நலத்திட்டங்களுக்கான மக்கள் பணிகள் பாதிப்பு
/
வருவாய்த்துறையினர் தொடர் வேலை நிறுத்தத்தால் பணிகள் முடக்கம்! சான்றிதழ்கள், நலத்திட்டங்களுக்கான மக்கள் பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் தொடர் வேலை நிறுத்தத்தால் பணிகள் முடக்கம்! சான்றிதழ்கள், நலத்திட்டங்களுக்கான மக்கள் பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் தொடர் வேலை நிறுத்தத்தால் பணிகள் முடக்கம்! சான்றிதழ்கள், நலத்திட்டங்களுக்கான மக்கள் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 27, 2024 11:49 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சான்றிதழ்கள், நலத்திட்டங்களுக்கான மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அடிப்படை விதிதிருத்த ஆணையை வெளியிட வேண்டும், வருவாய்த்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து தாலுகாக்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனே ஏற்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், கடந்த 22-ந் தேதி முதல் பணிகளை புறக்கணித்து, அரசு அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்திலும், 3 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கோரிக்கை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், நேற்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலக உதவியாளர்கள் நிலை முதல், தாசில்தார்கள் நிலை வரையிலான, 320க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் பணிக்கு செல்லாமல், கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை சார்ந்த அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்கள், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகம், திண்டிவனம் சப் -கலெக்டர் அலுவலகம், கலால் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில், 80 சதவீதம் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்களின்றி வெறிச்சோடியது.
இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வருவாய்த்துறை வழங்கும் சான்றிதழ் பணிகள், சட்டம் ஒழுங்கு நிர்வாகம், நிலம் எடுப்பு பணிகள், பட்டா, சிட்டா வழங்கும் பணி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய மக்கள் நல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

