/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகரமன்றக் கூட்டத்தில் தி.மு.க., -அ.தி.மு.க., காரசார... வாக்குவாதம்; அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
/
நகரமன்றக் கூட்டத்தில் தி.மு.க., -அ.தி.மு.க., காரசார... வாக்குவாதம்; அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
நகரமன்றக் கூட்டத்தில் தி.மு.க., -அ.தி.மு.க., காரசார... வாக்குவாதம்; அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
நகரமன்றக் கூட்டத்தில் தி.மு.க., -அ.தி.மு.க., காரசார... வாக்குவாதம்; அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
ADDED : மார் 14, 2024 06:21 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் கடந்த இரண்டரை ஆண்டில் சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகள் கூட நடக்கவில்லை என, நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். அப்போது, அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் சேர்மன் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. துணை சேர்மன் சித்திக்அலி, கமிஷனர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;
தி.மு.க., கவுன்சிலர் மணவாளன்: நகரில் பாதாள சாக்கடை பணிக்கு பிறகு, சாலை சீரமைக்காமலும், எல்.இ.டி., தெரு மின் விளக்குகள் அமைக்காமல் நீண்டகாலமாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில்லை, அதற்குரிய பதிலும் அலுவலர்கள் தருவதில்லை. மின் விளக்கில்லாததால், போதை ஆசாமிகள் தொந்தரவு அதிகரித்துள்ளது.
சேர்மன் தமிழ்ச்செல்வி: பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் சாலை போடாததாலும், எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்காமல் காலம் தாழ்த்துவதால், எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. கவுன்சிலர்கள் புகார் அளித்தும், அதிகாரிகள் ஏன் பதில் தெரிவிக்கவில்லை.
ராதிகா செந்தில் (அ.திமு.க): இந்த நகராட்சியின் செயல்படாத அவல நிலை குறித்து, ஆளும் கட்சி கவுன்சிலரே புகார் கூறியுள்ளார். அனைத்து திட்டங்ளும் அரைகுறை தான். தி.மு.க., ஆட்சியின் சாதனை எனவும், போதை பொருள் புழக்கத்தையும், ஆளும் கட்சி கவுன்சிலர்களே குறிப்பிட்டுள்ளனர்.
அப்போது, தி.மு.க., கவுன்சிலர் மணவாளன் குறுக்கிட்டு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தான் குட்கா முறைகேடு புகார் வந்தது என்றார்.
அதற்கு சேர்மன் தமிழ்ச்செல்வி, போதை பொருள் விவகாரங்கள் குறித்து முதல்வர் பதில் சொல்வார் என்றார்.
மாறி மாறி அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் எழுந்து, குற்றச்சாட்டுகளை தெரிவித்து வாக்குவாதம் செய்ததால், கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பிற கவுன்சிலர்கள் எழுந்து, அரசியல் பேசாமல், உள்ளூர் பிரச்னையை பேசும்படி குரல் எழுப்பியதால், அமைதி திரும்பியது.
பின்னர், கவுன்சிலர்கள் பேசுகையில், 'நகராட்சியில் பல இடங்களில் நிழற்குடை அமைக்காமல் உள்ளது. கேட்டால் இடம் இல்லை என்கின்றனர்.
கோடை வந்துள்ளதால், தேவையான இடங்களில் நிழற் குடை அமைக்க வேண்டும். பெரியார் நகரில் நிழற்குடையை ஆக்கிரமித்து பாலகம் அமைத்துள்ளதை அகற்ற வேண்டும்.
பல இடங்களில் தெரு மின் விளக்குகள் கூட எரியவில்லை. ஓட்டு கேட்க போனால், மக்கள் விடமாட்டார்கள். தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
1வது வார்டில் 2 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை உள்ளது. பாதாள சாக்கடை போடாமல் கிடப்பில் உள்ளது. அடிப்படை பிரச்னைகள் கூட தீர்க்கவில்லை என்றனர். சேர்மன் பதிலளிக்கையில், கவுன்சிலர்கள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்' என்றார்.

