லாரி கவிழ்ந்து விபத்து அரியலுார் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் கம்பெனியிலிருந்து டாரஸ் லாரி சென்னை, திருப்போரூருக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை புதுக்கோட்டை மாவட்டம், அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன், 33; ஓட்டினார். நேற்று காலை 8:20 மணிக்கு மயிலம் அருகே உள்ள தென்பசியார் அருகே திடீரென லாரியின் முன் இடது பக்க டயர் வெடித்து சாலையோரம் கவிழ்ந்தது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 பேரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் பாவாடை மகன் காத்தவராயன், 25; கொளப்பாக்கம் தனியார் பள்ளி வேன் டிரைவர். ஆவிகொளப்பாக்கம் சக்ரவர்த்தி மகன் ஆனந்த், 38; இருவரும் கடந்த 21ம் தேதி திருக்கோவிலுார் மருத்துவமனை சாலை தனியார் வணிக வளாகத்தில் இருந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 பேர் காத்தவராயன் மற்றும் ஆனந்தை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காத்தவராயன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் அடையாளம் தெரியாத 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மயங்கி விழுந்த முதியவர் சாவு திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுாரை சேர்ந்தவர் கேசவன், 80; பெங்களூருவில் மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் செல்ல திருக்கோவிலுார் பஸ் நிலையம் வந்தவர் மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
மகள் மாயம்: தாய் புகார் கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் வெங்கடேசன் மகள் அகல்யா, 17; தேவியாக்குறிச்சி தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தாய் அலமேலு அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
மனைவியை தாக்கிய கணவர் கைது திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் சுப்ரமணி மகன் மணிகண்டன், 32; இவரது மனைவி ரேவதி, 30; இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டிற்கு முன் ரேவதி, கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு மணிகண்டன், தனது தாய் சந்திராவுடன் சென்று ரேவதியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து தகராறு செய்து ரேவதி, அவரது தந்தை நாராயணன் ஆகியோரை தாக்கினார். ரேவதி அளித்த புகாரின் பேரில் மணிகண்டன், சந்திரா ஆகியோர் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
சிறுமி மாயம்: போலீஸ் விசாரணை விழுப்புரம், கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷரியாபானு மகள் பர்வின்பானு, 16; 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி, கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குட்கா விற்ற 2 பேர் கைது எஸ்.பி., சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் முண்டியம்பாக்கம் ஒரத்துார் ரோடு பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். அதில், திருநாவுக்கரசு, 42; பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை கைப்பற்றி விசாரித்தனர். அதில், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, 24; சப்ளை செய்தது தெரிந்தது. உடன் கடையில் இருந்த 11 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, திருநாவுக்கரசு, ராஜா இருவரையும் விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
பெண்ணைத் தாக்கியவர் மீது வழக்கு விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண். செவிலியர். 4 ஆண்டுகளுக்கு முன், கண்டமங்கலத்தை சேர்ந்த செந்தில், 50; என்பவருடன் பழகியுள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி வளவனுார் அருகே அந்த பெண்ணை சந்தித்த செந்தில், தன்னுடன் ஏன் பேசவில்லை என கேட்டு தகராறு செய்து தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில், செந்தில் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பைக் மோதி காயமடைந்தவர் சாவு விக்கிரவாண்டி அடுத்த ராஜாபாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிகுமார், 32; கூலித் தொழிலாளி. இவர் தனது பைக்கில் கடந்த 5ம் தேதி இரவு 7:00 மணியளவில் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். லட்சுமிபுரத்தில் எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஹரிகுமார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆடுகள் திருட்டு: போலீஸ் விசாரணை விழுப்புரம், சாலாமேடு, மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் வேலு, 55; விவசாயி. வீட்டில், ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இவர், கடந்த 21ம் தேதி இரவு வழக்கம் போல் தன் ஆடுகளை, வீட்டின் பின் பகுதி கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். காலையில் பார்த்த போது 4 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குட்கா விற்பனை: தம்பதி கைது திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று இந்திராகாந்தி பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் குட்கா பொருட்களை கடத்திவந்த கிடங்கல் (1) ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த ஜானிபாஷா மகன் ரகீம், 38; அவரது மனைவி ஜெரீனா, 33; ஆகிய இருவரையும் கைது செய்து, 300 குட்கா பாக்கெட்டுகள் கொண்ட 6 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
கால்வாயில் ஆண் சடலம் மீட்பு மரக்காணம் டாஸ்மாக் கடை அருகே பக்கிங்காம் கால்வாயில் நேற்று மாலை அடையாளம் தெரியாத 28 வயது வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. தகவலறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.