/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிகரிக்கும் சைபர் கிரைம் புகார்களால் போலீஸ் திணறல்: பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றும் மர்ம கும்பல்
/
அதிகரிக்கும் சைபர் கிரைம் புகார்களால் போலீஸ் திணறல்: பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றும் மர்ம கும்பல்
அதிகரிக்கும் சைபர் கிரைம் புகார்களால் போலீஸ் திணறல்: பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றும் மர்ம கும்பல்
அதிகரிக்கும் சைபர் கிரைம் புகார்களால் போலீஸ் திணறல்: பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றும் மர்ம கும்பல்
ADDED : ஜூலை 30, 2024 05:55 AM
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு மற்றும் மதுவிலக்கை கண்காணித்தல் என மொத்தம் 42 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த போலீசார், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கமாக உள்ளது. இவர்கள், கண்ணுக்கு தெரிவதால், போலீசார் சுலபமாக அவர்கள் மீது வழக்கு போடுவதும், கைது செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், கண்ணுக்கு தெரியாமல் மர்ம நபர்கள் ஆன்லைன் வழியாக படித்தவர்களை குறி வைத்து நுாதனமாக பணத்தை கறக்கும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட, விழுப்புரம் மாவட்டத்தில் ஆன்லைன் வழியாக பணத்தை கறக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
இந்த நுாதன புகார்களை விசாரித்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவு துவங்கப்பட்டது.
இந்த பிரிவில், விழுப்புரம் மாவட்டத்தில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7க்கும் குறைவான போலீசாரே பணிகளில் உள்ளனர். இதில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசார், சைபர் கிரைம் புகார்கள் சம்பந்தமாக, வெளியூர் செல்வதால், மற்ற புகார்களை விசாரிக்க போதுமான போலீசார் இல்லாத நிலை நீடிக்கிறது.
இந்த சூழலில், சைபர் கிரைமில் தொடர்ந்து புகார்களும், இதனால் பணத்தை இழந்தோரின் பண மதிப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பொறியாளர், செவிலியர், முன்னாள் ராணுவ வீரர் என படித்த பட்டதாரிகள், அரசு பணிகளில் உள்ளோரை டெலிகிராம் டாஸ்க், பகுதிநேர பணி எனக்கூறி நுாதனமாக ஆன்லைன் வழியாக மர்ம நபர்கள் ஏமாற்றி முதலில் குறைவான பணத்தை வழங்கி ஆசைகாட்டி, பின்னால் பெரிய அளவிலான பணத்தை சுருட்டுகின்றனர்.
இந்த விஷயம் தெரியாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு, பலர் பணத்தை இழக்கின்றனர். இதில், ஒருசில படித்த பெண்கள், வீட்டிற்கு தெரியாமல் பணத்தை ஆன்லைன் வழியாக பணத்தை இழப்பதால், புகார் அளித்தால் பணம் இழந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்துவிடும் என எண்ணி, போலீசாரிடம் புகார் அளிக்காமலே உள்ளனர்.
மாவட்டத்தில், ஆன்லைன் நுாதன மோசடி குறித்து, சைபர் கிரைம் போலீசார் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் போதுமான விழிப்புணர்வு செய்தும், குற்றங்கள் குறையவில்லை.
இந்த சூழலை எப்படி சமாளிப்பது என புரியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.
சைபர் கிரைம் புகார்கள் பெரும்பாலும் படித்த பட்டதாரி, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளோரிடம் வருகிறது. இது போன்று வரும் புகார்களை, சைபர் கிரைம் போலீசார், வெளியே கசியாமல் மறைத்து ரகசியமாக விசாரிப்பதோடு, எஸ்.பி., போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டும் விசாரணை நிலை பற்றி தகவலை தெரிவிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் புகார்கள் அதிகரிப்பதால், பற்றாக்குறையான போலீசாரை வைத்து கொண்டு, திக்குமுக்காடும் நிலை நீடிக்கிறது. இதற்கு, காவல் துறை உயர் அதிகாரிகள் துரிதமான தீர்வை காண வேண்டும்.

