/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறுதி ஊர்வலங்களில் தொடரும் இடையூறு கண்டு கொள்ளாத போலீஸ்; பொது மக்கள் அதிருப்தி
/
இறுதி ஊர்வலங்களில் தொடரும் இடையூறு கண்டு கொள்ளாத போலீஸ்; பொது மக்கள் அதிருப்தி
இறுதி ஊர்வலங்களில் தொடரும் இடையூறு கண்டு கொள்ளாத போலீஸ்; பொது மக்கள் அதிருப்தி
இறுதி ஊர்வலங்களில் தொடரும் இடையூறு கண்டு கொள்ளாத போலீஸ்; பொது மக்கள் அதிருப்தி
ADDED : ஏப் 30, 2024 06:25 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இறுதி ஊர்வலங்களின்போது சாலையில் மாலைகள் வீசப்படுவதும், போக்குவரத்து இடையூறும் தொடர்ந்து வருவதாக, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களின்போது, சாலையில் மாலை, மலர் வளையங்கள் வீசப்பட்டு, மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக எழுந்த புகார் குறித்து, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.
கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, தமிழக காவல்துறை, எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கினர்.
அனைத்து எஸ்.பி.,க்களுக்கும், தமிழக டி.ஜி.பி., கடந்த மாதம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இறுதி ஊர்வலம் உணர்வுபூர்வ விவகாரம் என்றாலும், மக்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த விவகாரத்தில், அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது, இறுதி ஊர்வலம் எப்போது, எந்த வழியாக செல்கிறது என்ற விவரத்தை, உறவினர்கள் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த சாலையை, போலீசார் போக்குவரத்து நெரிசலின்றி சரி செய்து தர வேண்டும்.
இறந்தவரின் உடல் மீது போடப்படும் மாலை, மலர் வளையங்களை வீட்டின் அருகே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஊர்வலத்தில் அதிகளவு மாலை, மலர் வளையம் கொண்டு செல்லக் கூடாது. அவைகளை சாலைகளிலும் வீசக்கூடாது. உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மூலம் சாலையில் விழும் மாலையை அப்புறப்படுத்த வேண்டும்.
மரண விளம்பர பேனர்களையும், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்க கூடாது. இந்த விதிகளை பின்பற்றவும் வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தனர்.
ஆனாலும், விழுப்புரம் மாவட்டத்தில், இந்த உத்தரவு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
விழுப்புரத்தில் கே.கே.ரோடில், சுடுகாடும் அதன் அருகே மின் மயானமும் உள்ளது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதி வாசிகளுக்கான இறுதி சடங்கு செலுத்தும் இடமாக உள்ளது.
இதனால், விழுப்புரம் கே.கே.ரோடுக்கு தினசரி 5 முதல் 10 வரை இறுதி சடங்கு ஊர்வலங்கள் வருகிறது.
இந்த ஊர்வலங்களின் போது, கே.கே.ரோடின் தொடக்கம் முதல் சுடுகாடு பகுதி வரை மாலைகளை சாலையில் வீசுவது வாடிக்கையாகவே உள்ளது. மேலும், சுதாகர் நகர் சாலை, கலைஞர் நகர் சாலை வழியாகவே இறுதி ஊர்வலம் கே.கே.ரோடு மயானத்துக்கு தினசரி செல்கிறது. அந்த சாலைகளிலும், இப்படி மலர் வளையும், மலர் மாலைகள் வீசப்படுவதால், வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.
சாலைகளில், அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடிப்பதும் உள்ளது. அந்த பகுதி குடியிருப்பு வாசிகள், தினசரி காலை, மாலை வேளைகளில் சாலையை சுத்தம் செய்வதாகவும் புலம்புகின்றனர். இது குறித்து, விழிப்புணர்வு இல்லாததால், சுடுகாடு பகுதி சாலைகளில், தினசரி மக்கள் வேதனையில் புலம்பும் நிலை தொடர்கிறது.

