/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னை செல்ல பஸ் வசதியின்றி செஞ்சியில் பயணிகள் கடும் அவதி
/
சென்னை செல்ல பஸ் வசதியின்றி செஞ்சியில் பயணிகள் கடும் அவதி
சென்னை செல்ல பஸ் வசதியின்றி செஞ்சியில் பயணிகள் கடும் அவதி
சென்னை செல்ல பஸ் வசதியின்றி செஞ்சியில் பயணிகள் கடும் அவதி
ADDED : ஏப் 22, 2024 05:40 AM
செஞ்சி: செஞ்சியில், மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னை செல்ல பஸ் வசதியின்றி பயணிகள் அவதிப்பட்டனர்.
கடந்த 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலுக்காக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பொது விடுமுறை விடப்பட்டது. அதற்கு அடுத்த நாட்கள் சனி, ஞாயிறு என மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைந்தது.
இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் ஓட்டு போடுவதற்காக செஞ்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வந்திருந்தனர்.
சென்னையில் ஓட்டு இருந்தவர்களும் ஓட்டு போட்டு விட்டு விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இவர்களில் பெரும் பகுதியினர் நேற்று மீண்டும் சென்னைக்குச் செல்ல மதியம் 1:00 மணியில் இருந்து செஞ்சியில் குவியத் துவங்கினர்.
செஞ்சியில் இருந்து மிக குறைந்த அளவிலேயே சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி வழியாக சென்னை செல்லும் பஸ்களையே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ்கள் ஏற்கனவே நிற்கவும் இடமில்லாமல் நெரிசலோடு வந்ததால், பயணிகள் அந்த பஸ்களில் ஏற முடியாமல் நீண்ட நேரம் அவதிப்பட்டனர்.
குழந்தைகளுடன் வந்தவர்கள் மாலை வரை உட்கார்ந்து செல்ல பஸ் இல்லாமல் மீண்டும் வீடு திரும்பினர். மற்றவர்கள் வேறு வழியின்றி பஸ் படிக்கட்டுகளில் நின்றபடி சென்றனர். இது போன்ற நாட்களில் தனியார் டூரிஸ்ட் பஸ்களையும், ஸ்பேர் பஸ்களையும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி சென்னைக்கு சென்று வர அரசு அனுமதி வழங்கினால் பயணிகளின் சிரமம் ஓரளவிற்கு குறையும்.
முன்பதிவு இல்லை
அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட பஸ்களில் முக்கிய நகரங்களுக்குச் செல்ல சில ஆண்டுகள் முன்பு வரை முன்பதிவு முறை இருந்தது. இந்த முறையால் அரசுக்கும் வருவாய் கிடைத்தது.
முன்பதிவு முறையை ரத்து செய்ததால் குழந்தைகளுடன் வெளியூர் பயணம் செய்பவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

