/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியதால் பிரச்னை தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் சாலை மறியல்
/
ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியதால் பிரச்னை தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் சாலை மறியல்
ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியதால் பிரச்னை தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் சாலை மறியல்
ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியதால் பிரச்னை தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் சாலை மறியல்
ADDED : மார் 24, 2024 04:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரயில்வே கேட் நிரந்தரமாக மூடியதை கண்டித்து கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் இருந்து கண்டமானடி செல்லும் பகுதியில் உள்ள ரயில்வே கேட், தெற்கு ரயில்வே துறை சார்பில் நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகையை கடந்த 2 வாரங்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் வைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜானகிபுரம், கண்டமானடி கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். விழுப்புரம் தாலுகா போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் மூலம் நள்ளிரவில், ரயில்வே கேட்டை நிரந்தரமாக தகர ஷீட்டுகள் மூலம் மூடி சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி வாகனங்கள் ரயில்வே கேட்டை கடக்க முடியாத நிலையை ஏற்பாடு செய்து வைத்தனர்.
இந்த கேட்டை மூடியதால் மாணவர்கள், விவசாயிகள் பலரும் பாதிப்பதோடு, 5 கி.மீ., துாரம் ஜானகிபுரம் மேம்பாலத்தை கடந்து செல்ல நேரிடும் எனக்கூறி, கிராம மக்கள் ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க கோரி நேற்று காலை 10.15 மணிக்கு ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் விழுப்புரம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையிலான தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரயில்வே நிர்வாகத்திடம் கலந்து பேசி, கேட் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினர்.
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், 'ரயில்வே கேட்டை உடனே திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறிவிட்டு, 11.00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

