/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தடை செய்யப்பட்ட நாயை தண்ணீரில் தவிக்க விட்டவர்
/
தடை செய்யப்பட்ட நாயை தண்ணீரில் தவிக்க விட்டவர்
ADDED : நவ 24, 2024 02:12 AM

திருச்சி:திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் தண்ணீரில், நேற்று, உடல் நலம் குன்றிய நாய் ஒன்று, நடுங்கியபடி தவித்துக் கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற இளைஞர், அந்த நாயை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தார்.
சமீபத்தில், 10க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் வளர்ப்புக்கு தடை விதித்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'பிட்புல்' வகையைச் சேர்ந்த அந்த நாயும் தடை செய்யப்பட்ட வகைகளுள் ஒன்று. அதனால், அதை வளர்த்தவர், தெருவில் விட்டுச் சென்று இருக்கலாம் என, அந்த இளைஞர் தெரிந்து கொண்டார்.
தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட நாயின் உடல்நிலை மோசமாக இருந்ததால், நாய்களை பராமரிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கண்ணையாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு வந்து, இளைஞரால் மீட்கப்பட்ட நாயை எடுத்துச் சென்றார்.
'அரசால் தடை செய்யப்பட்ட நாய்கள் வைத்திருப்பவர்கள், அவற்றை தெருவில் விடாமல், விலங்குகள் நல வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்து, முறைப்படி ஒப்படைக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
உயிருக்கு போராடிய நாயைக் காப்பாற்றி, பராமரிப்பாளரிடம் ஒப்படைத்த இளைஞரை பலரும் பாராட்டினர்.

