/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரைவழியில் மறைந்த கொடிக்கால் வெற்றிலை மீண்டு வருமா?
/
கரைவழியில் மறைந்த கொடிக்கால் வெற்றிலை மீண்டு வருமா?
கரைவழியில் மறைந்த கொடிக்கால் வெற்றிலை மீண்டு வருமா?
கரைவழியில் மறைந்த கொடிக்கால் வெற்றிலை மீண்டு வருமா?
ADDED : ஆக 28, 2025 05:41 AM
உடுமலை; மடத்துக்குளம் பகுதியில், வெற்றிலை சாகுபடிக்கு புத்துயிர் அளிக்க தோட்டக்கலை துறை வாயிலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பழைய ஆயக்கட்டு பகுதியில், கரைவழி எனப்படும் கணியூர், கடத்துார் பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, வெற்றிலை நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இச்சாகுபடிக்காக, கொடிபடரும் கால் அமைத்தல், பராமரிப்பு, அறுவடை என நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.
வெற்றிலை சாகுபடி முறை வித்தியாசமானது. நீர்வளம் உள்ள இடத்தில், ஐந்து சென்ட் முதல் பத்து சென்ட் இடத்தை தேர்வு செய்து, அந்த நிலத்தை பண்படுத்தி, அதில் அகத்தி விதையை நடுவார்கள்.
இந்த விதை வளர்ந்து மூன்று மாதங்களுக்குப்பிறகு, இந்த குச்சிகளை சுற்றி வெற்றிலைக்கொடிகளை நட்டு சாகுபடியை தொடங்குவார்கள். வெற்றிலை கொடி, நன்கு வளர்ந்து அறுவடைக்கு வருவதற்கு, ஆறு மாதங்கள் வரை ஆகும்.
இதற்குப்பின் அறுவடை தொடங்கும். இதை 'வெற்றிலை கிள்ளுதல்' என குறிப்பிடுகின்றனர். முதல் கிள்ளுதலுக்கு பின்பு மாதம் தோறும், ஒரு முறை வெற்றிலைகள் கிள்ளப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும்.
கற்பூரம், வட்டகொடி, சர்க்கரை கொடி என மூன்று ரக வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், பிரத்யேகமாக சாகுபடி யான வெற்றிலை சாகுபடி முற்றிலுமாக மறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மண் வளம் குறைந்து உற்பத்தி பாதித்தது; நிலையான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், வெற்றிலை சாகுபடி அரிதாகி விட்டது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கணியூர் சுற்றுப்பகுதியின் அடையாளமாக 'கொடிக்கால்கள்' இருந்தது. தற்போது, சில இடத்தில் மட்டும் உள்ளது. இது குறித்து அரசு கவனம் செலுத்தி, வெற்றிலை சாகுபடிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். தோட்டக்கலை துறை வாயிலாக சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்' என்றனர்.