/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜனநாயகம் மேம்பட... வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்னும் 8 நாட்களே அவகாசம்
/
ஜனநாயகம் மேம்பட... வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்னும் 8 நாட்களே அவகாசம்
ஜனநாயகம் மேம்பட... வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்னும் 8 நாட்களே அவகாசம்
ஜனநாயகம் மேம்பட... வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்னும் 8 நாட்களே அவகாசம்
ADDED : நவ 20, 2024 12:34 AM

திருப்பூர்; வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், வரும், 28ல் நிறைவடைகிறது. இன்னும் எட்டு நாட்களே உள்ளதால், பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த அக். 29 ல் வரைவுபட்டியல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் நேரடியாகவும், Voter Helpline மொபைல் செயலி மற்றும் https://voters.eci.gov.in என்கிற இணையதளம் மூலமாக ஆன்லைனிலும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
நான்கு நாட்கள் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எட்டு சட்டசபை தொகுதிகளில் மொத்தமுள்ள, 2,536 ஓட்டுச்சாவடி மையங்களிலும், கடந்த 16, 17ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, வரும் 23, 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வரும் 28ம் தேதியுடன் சுருக்கமுறை திருத்தம் முடிவடைய உள்ளது. இன்னும், 8 நாள் மட்டுமே உள்ளதால், வரும், 2025 ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளையோர், இனியும் தாமதிக்காமல் உடனடியாக படிவம் எண்: - 6ஐ பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் 2025 ஏப்., 1, ஜூலை 1, அக்., 1 ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியாவோரும், இப்போதே, பெயர் சேர்ப்பதற்கான படிவம் - 6 பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். அவர்களது பெயர், அந்தந்த காலாண்டுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

