/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலம் அளக்க சென்ற சர்வேயர் சிறைப்பிடிப்பு
/
நிலம் அளக்க சென்ற சர்வேயர் சிறைப்பிடிப்பு
ADDED : டிச 24, 2025 07:18 AM
அவிநாசி: தனியார் நிலத்தை அளக்கச் சென்ற சர்வேயர் சிறைப்பிடிக்கப்பட்டார்.
அவிநாசி, தெக்கலுார் அருகே ஆலாம்பாளையம் கிராமத்தில், கோவை - சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த சுப்பிரமணியம் 59, என்பவருக்கு சொந்தமான ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் மீது வங்கியில் கடன் வாங்கிய நிலையில், கடன் பாக்கிக்காக, நிறுவனத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை எதிர்த்து ஆனந்த சுப்பிரமணியம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதற்காக, தனது நிறுவனத்தை அளவீடு செய்ய அவிநாசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்காக, 19ம் தேதி சர்வேயர் பிரியா என்பவர், நில அளவீடு செய்ய சென்றார். நிறுவனம் நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதை அறிந்து அளவீடு செய்ய முடியாது என்றார். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஆனந்த சுப்பிரமணியம் மற்றும் நிறுவன ஊழியர்கள், நிலத்தை அளவீடு செய்து கொடுத்தால் தான் வெளியில் விடுவோம் எனக் கூறி பிரியாவை வெளியே செல்ல அனுமதிக்காமல் சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து அவிநாசி தாசில்தார் சந்திரசேகருக்கு பிரியா தகவல் அளித்தார். அதன்பேரில், அந்நிறுவனத்துக்கு விரைந்து சென்ற தாசில்தார், பிரியாவை விடுவித்து அழைத்து வந்தார். இது குறித்து, பிரியா அவிநாசி போலீசாரிடம் புகார் அளித்தார். தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

