/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம்: உதவி பொறியாளர் கைது
/
மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம்: உதவி பொறியாளர் கைது
மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம்: உதவி பொறியாளர் கைது
மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம்: உதவி பொறியாளர் கைது
ADDED : அக் 10, 2024 06:25 AM

உடுமலை : உடுமலை அருகே, விவசாய மின் இணைப்பு வழங்க, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, கொங்கல்நகரம் மின்வாரிய உதவி பொறியாளரை, திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கொங்கல்நகரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், உதவிப்பொறியாளராக பணியாற்றுபவர் சத்தியவாணி, 41.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியைச்சேர்ந்தவர் ஜெயராமன்; 47; இவருக்கு சொந்தமான நிலம், தொட்டம்பட்டி கிராமத்தில் உள்ளது. நிலத்துக்கு, விவசாய மின் இணைப்பு கேட்டு, கொங்கல்நகரம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில், விண்ணப்பத்திருந்தார். மின் இணைப்பு வழங்குவது இழுபறியாக இருந்ததால், அந்த அலுவலகத்தை அணுகியுள்ளார்.
இந்நிலையில், மின்கம்பம் அமைக்கவும், இணைப்பு வழங்கவும் கொங்கல்நகரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், பணியாற்றுபவர்கள் லஞ்சம் கேட்பதாக ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராமனிடம் கொடுத்து அனுப்பினர். விவசாய மின் இணைப்புக்கு முதற்கட்டமாக, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக ஜெயராமன் மின்வாரிய அதிாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்று காலை, 10:30 மணிக்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்ற ஜெயராமன், உதவி பொறியாளர் சத்தியவாணியிடம் ரசாயனம் தடவிய, 2 ஆயிரம் ரூபாயை கொடுத்த போது, இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சத்தியவாணியை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

