பெண் போலீசை தாக்கிய கணவர்
காங்கயம் போக்குவரத்து போலீசாக சத்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரஞ்சித், ஊதியூர் போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் சத்யாவை, அவரது கணவர் தாக்கினார். காயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் குறித்து சக போலீஸ்காரரான, கணவரிடம் காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவியை தாக்கிய போதை வாலிபர்
முத்துார், மூத்தாம்பாளையத்துக்கு வந்த கரூர், பரமத்தியை சேர்ந்த கலைநிலவன், 23, என்பவர், கஞ்சா போதையில் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் போதையில் அட்ராசிட்டி செய்தார். இதை மக்கள் தட்டி கேட்டனர். அங்கு நின்றவர்கள் மீது கல்லை வீசினார். அதில் 18 வயது கல்லுாரி மாணவி ஒருவர் காயமடைந்தார். புகாரின் பேரில், கலைநிலவனை வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி காயம்
கோவையில் இருந்து கரூர் நோக்கி செல்லும் அரசு பஸ் பயணிகளுடன் நேற்று காங்கயம் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றது. எதிர்பாராத விதமாக பஸ்சை, குறுக்கே கடக்க முயன்ற முதியவர், முன்பக்க சக்கரத்தில் சிக்கினார். கால் முறிவு ஏற்பட்டு, தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தமிழ்செல்வன், 55 என்பதும், போதையில் பஸ்சின் குறுக்கே வந்த போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

